நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய சமூகத்தினர் பிரதமரை மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் வரவேற்றனர். பிரதமர் தமது உரையின் போது, இந்திய-அமெரிக்க உறவில் இந்திய சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை சுட்டிக்காட்டினார். இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். நேற்று முன்தினம் டெலாவரில் உள்ள அதிபர் பைடனின் இல்லத்தில் அவரைச் சந்தித்தது குறித்து பிரதமர் பேசினார். அமெரிக்கா மீது இந்திய சமூகம் கொண்டுள்ள நம்பிக்கை இந்தச் சிறப்பான செயலில் பிரதிபலித்ததாக அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கையின் போது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சாதனையை தாம் சாதித்ததாக அவர் குறிப்பிட்டார். கடந்த தசாப்தத்தில், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை நிறுவுதல், 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்தல், நாட்டின் பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு உயர்த்துதல் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு பாடுபடுதல் உள்ளிட்ட மாற்றங்களுக்கு இந்தியா உட்பட்டுள்ளது என அவர் கூறினார்.
சீர்திருத்தங்கள் மூலம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோர், புதிய தொழில்கள், நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகியவற்றுடன் நாட்டில் புதிய சக்தி உருவாகி வருவதை அவர் குறிப்பிட்டார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் பசுமை மாற்றம் ஆகியவை அடித்தள அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
உலகளாவிய வளர்ச்சி, வளம், அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, புதுமைப் படைப்புகள், விநியோகம் மற்றும் மதிப்புச் சங்கிலிகள், சர்வதேச திறன் மையங்களில் உள்ள இடைவெளிகளை நிரப்புவது ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் குரல் இன்று சர்வதேச அரங்கில் மேலும் மேலும் கேட்கப்படுகிறது என பிரதமர் கூறினார்.
அமெரிக்காவில் பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் இரண்டு புதிய இந்திய தூதரகங்களையும், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்கான திருவள்ளுவர் இருக்கையையும் திறக்கும் திட்டங்களையும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவில் வசிக்கும் அதன் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான உயிரோட்டமான பாலம் இந்த நடவடிக்கைகளால் மேலும் பலப்படுத்தப்படும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் இந்திய புலம்பெயர்ந்தோரின் கூட்டு சக்தி பெரும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.