தேசிய மாணவர் படையின் (NCC) கூட்டு மாநில பிரதிநிதிகள், கூடுதல்/துணை தலைமை இயக்குநர்கள் மாநாட்டை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இன்று (2024 செப்டம்பர் 23) புதுதில்லியில் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய அவர், தேச கட்டமைப்பில் தேசிய மாணவர் படையின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். ஒழுக்கமான, பொறுப்பான மற்றும் ஊக்கமளிக்கும் இளம் மக்களை வடிவமைக்க இந்த அமைப்பு எவ்வாறு உதவுகிறது என்பதை அவர் விளக்கினார். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தலைமைத்துவ திறன்களையும் இது வளர்ப்பதாக அவர் கூறினார்.
தூய்மை இந்தியா இயக்கம், சர்வதேச யோகா தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் விழிப்புணர்வு, சமூக நலனுக்கான அதன் அர்ப்பணிப்பு போன்ற தேசிய முயற்சிகளில் என்.சி.சியின் ஈடுபாட்டை எடுத்துரைத்த இணையமைச்சர், மாநில அரசுகள் தங்கள் பிராந்தியங்களில் என்சிசியின் இருப்பை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் குர்பிர்பால் சிங் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் என்.சி.சி.யின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளையும், எதிர்கால விரிவாக்கத்திற்கான அதன் திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
இந்த மாநாடு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும், இதில் கல்வி அமைச்சர்கள், இளைஞர், விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் அந்தந்த மாநிலத்தில் தேசிய மாணவர் படை விவகாரங்களைக் கையாளும் துறைகளின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அனைத்து மாநிலங்களின் தேசிய மாணவர் படை தலைவர்கள் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
திவாஹர்