தமிழக அரசு இனாம் ஒழிப்பு சட்டங்களின் மூலம் பட்டா வழங்கும் முறையை முறையாக சரியாக கடைபிடிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, இனாம் ஒழிப்பு சட்டங்களின் மூலம் பட்டா பெற்றவர்களுக்கும். பட்டா பெற வருபவர்களுக்கும் மற்றும் சொந்த அனுபோகத்தில் பட்டா பெற முயற்சிப்பவர்களுக்கும் நில உரிமையை உறுதி செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா விடுதலை பெற்றபோது தமிழ்நாட்டில் 13 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட இனாம் நிலங்கள் இருந்தன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இனாம் ஒழிப்பு சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டு, சீர்த்திருத்தங்கள் மூலம் அனுபோகத்தில் இருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டன. இனாம் ஒழிப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட காலக்கட்டங்களில் விடுபட்டவர்களுக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலம் போல சட்டத்திருத்தம் மூலம் மறு வாய்ப்பு வழங்க விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை வைக்கின்றனர். தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு எஸ்டேட் அபாலிசன் சட்டம்-1948, மேஜர் இனாம் அபாலிசன் சட்டம்-1963, மைனர் இனாம் அபாலிசன் சட்டம்-1963 ஆகிய மூன்று இனாம் ஒழிப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டதால் நில உரிமைக்கு உரியவர்கள் பயன்பெற்றனர்.

1963 ஆம் ஆண்டு கர்மவீரர் காமராஜர் அவர்களால் இனாம் ஒழிப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது இந்து சமய அறநிலையத்துறையும், வக்பு வாரியமும் பட்டா சம்பந்தமாக பத்திரப்பதிவில் தடை ஏற்படுத்தி, இனாம் ஒழிப்பு சட்டங்களால் பயன்பெற முடியாத நிலையில், நில
உரிமையைப் பறிப்பதாக விவசாயிகளும், பொது மக்களும் குறை கூறுகின்றனர்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்,
பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இனாம் நிலங்களுக்கு முறையாக
பட்டா கொடுக்கப்பட்டாலும், அரசு வரிகளை செலுத்தியிருந்தாலும், பத்திர பதிவுத்துறை ஆவணங்களை வைத்திருந்தாலும் மற்றும் TDCP உட்பட்ட அரசு அனுமதி
பெற்றிருந்தாலும் நில உரிமையாளர்கள் தற்போது சமய நிறுவனங்களால்
கடுமையான இன்னல்களை சந்திக்கின்றனர். நிலம் இருந்தால் தான் கோவில்களை
காப்பாற்ற முடியும் என்கிற கோட்பாடு உண்மைக்கு புறம்பானது என விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பல லட்சம்
மக்கள் படிப்பறிவு இல்லாமல் பட்டா பெற தகுதி இருந்தும் பட்டா பெற தவறிவிட்டனர்.

இவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கி பட்டா வழங்க வேண்டும். மேலும் புஞ்சை நிலம் சம்பந்தமாக பத்திரம் இருந்து அறியாமையினாலும், பொருளாதாரம் இல்லாமலும் பதிவு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக சொந்த அனுபோகத்தில் இருக்கும் இடத்திற்கு பட்டா பெற முயற்சிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

எனவே தமிழக அரசு, இனாம் ஒழிப்பு சட்டங்களின் மூலம் பட்டா பெற்றவர்களுக்கும், பட்டா பெற வருபவர்களுக்கும் மற்றும் புஞ்சை நிலம் தொடர்பாக சொந்த அனுபோகத்தில் பட்டா பெற முயற்சிப்பவர்களுக்கும் முறைப்படி அவர்களுக்கான நில உரிமையை உறுதி செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply