நாட்டின் நிலக்கரி இறக்குமதி சிறிதளவு அதிகரிப்பு.

உலகின் ஐந்தாவது பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட இந்தியா, நிலக்கரி நுகர்வில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. தற்போதைய நுகர்வு நிலப்பரப்பு இறக்குமதிக்கான தேவையை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக கோக்கிங் நிலக்கரி மற்றும் உயர்தர வெப்ப நிலக்கரி, உள்நாட்டில் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்த பற்றாக்குறையால் இறக்குமதியை அவசியமாகிறது.

2024-25 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 0.9% அதிகரித்து, முந்தைய ஆண்டின் இறக்குமதியான 89.68 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 90.51 மில்லியன் டன்களை (MT) எட்டியுள்ளது. குறிப்பாக, இந்த காலகட்டத்தில் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 2% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 2.6% குறைந்துள்ளது. ஜூலை 2024-ல் மட்டும், நிலக்கரி இறக்குமதி 15.9% அதிகரித்தது. ஜூலை 2023-ல் 18.82 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது ஜூலை 2024-ல் 21.81 மில்லியன் டன்னை எட்டியது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2024 முதல் ஜூலை 2024 வரை நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியில் 10.18% குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கலப்பு நோக்கங்களுக்கான இறக்குமதி அதே காலகட்டத்தில் 8.2% குறைந்துள்ளது. இந்த சரிவு நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கும், இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. மின்சாரத் துறைக்கான நிலக்கரி இறக்குமதி அதிகரிப்புக்கு மின் உற்பத்தி நிலையங்கள் கணிசமான அளவு நிலக்கரி இறக்குமதி செய்ததே காரணம். அதாவது இந்த காலகட்டத்தில் 17.69 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.12 மில்லியன் டன்னாக இருந்தது. கூடுதலாக, ஒழுங்குபடுத்தப்படாத துறையின் நிலக்கரி இறக்குமதி 11% குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது. இந்தக் காலகட்டத்தில் அது 50.53 மில்லியன் டன்னிலிருந்து 44.97 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.

மேலும், ஏப்ரல்-ஜூலை 2024 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. 2023-24 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 293.35 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 321.40 மில்லியன் டன்னை எட்டியது, இது 9.56% வளர்ச்சியைக் குறிக்கிறது.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நிலக்கரி கிடைப்பதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்திசார் முன்முயற்சிகளை நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் இருப்புகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகள் இறுதியில் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும். அத்துடன் இந்தியாவின் எரிசக்தி சூழலின் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்குப் பங்களிக்கும்.

Leave a Reply