இந்தியா உலகின் மிகவும் வலுவான பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது: குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.

இந்தியா தற்போது உலகின் மிகவும் எழுச்சிமிக்க பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்றும், உலகளாவிய முதலீட்டிற்கு விருப்பமான இடமாக உள்ளது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். இன்று கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2024-ன் 2-வது பதிப்பில் தொடக்க உரையாற்றிய திரு தன்கர், இந்தியா கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ளது என்று கூறினார். வரவிருக்கும் ஆண்டுகளில் 8% வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பாராட்டிய திரு தன்கர், ஆண்டுக்கு 8 புதிய விமான நிலையங்களை புதியதாக திறப்பது, மெட்ரோ அமைப்புகளின் விரைவான விரிவாக்கம், தினசரி 28 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவது போன்றவற்றை குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் 12 புதிய தொழில்துறை மண்டலங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், செயற்கை நுண்ணறிவு, மின்சார போக்குவரத்து மற்றும் குறைக்கடத்திகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தியாவை நிலைநிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், நாம் இப்போது உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ கட்டடமைப்பைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் விமான நிலையங்களைக் கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 70-லிருந்து 140-ஆக இரட்டிப்பாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 800 மில்லியனுக்கும் அதிகமான பிராட்பேண்ட் பயனர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று அவர்  கூறினார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, மாதத்திற்கு 13 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

செமிகண்டக்டர் துறையின் முக்கியத்துவத்தையும் திரு தன்கர் சுட்டிக் காட்டினார், இந்த நூற்றாண்டு பாரதத்திற்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் கீழ் உத்தரப்பிரதேசம் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளதாக திரு தன்கர் பாராட்டு தெரிவித்தார்.

வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் பார்வையிட்டார்.

Leave a Reply