தமிழக அரசு பட்டாசுகள் தயாரிக்கும் இடங்களை கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.தமிழக அரசு பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

நேற்று திருப்பூர் பாண்டியன் நகரில், குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடி குண்டுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது.
ஒரு ஆண், 9 மாத பெண் குழந்தை என 3 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. மேலும் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடி விபத்தினால் ஒரு வீடு தரைமட்டமான நிலையில், எதிர் புறமாக இருந்த 20 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு மளிகைக் கடையும் முற்றிலும் சேதமுற்றுள்ளது.
வீட்டில் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடிமருந்துகள் வெடித்து 3 பேர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக்கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக் கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். அதற்காக வெடி தயாரிக்கும் நிறுவனத்தினர், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

தமிழக அரசு உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதோடு, இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய உயர்தர சிகிச்சை அளிக்க, உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply