பிம்ஸ்டெக் அரசு அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தை என்சிஜிஜி வெற்றிகரமாக நிறைவு செய்தது.

நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்சிஜிஜி)) வங்காள விரிகுடா முன்முயற்சி பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ( பிம்ஸ்டெக்) நாடுகளைச் சேர்ந்த அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான தனது முதலாவது இடைக்காலப் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 14 முதல் அக்டோபர் 25 வரை முசோரி மற்றும் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை, மியன்மார், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆணையாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் உதவி  பணிப்பாளர்கள் உட்பட 36 மூத்த அதிகாரிகளை இந்த இரண்டு வார நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிணைத்தது. இந்தத் திட்டம் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமைப் பணியாளர்களிடையே அறிவுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பரக் கற்றலை எளிதாக்குவதில் இந்தத் திட்டத்தின் பங்கை என்சிஜிஜி தலைமை இயக்குநர் திரு சுரேந்திர குமார் பாக்டே எடுத்துரைத்தார். நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாகச் செயல்படும் வெளிப்படையான, பொறுப்பான மற்றும் டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் ஆளுகை மாதிரியை உருவாக்குவதில் என்.சி.ஜி.ஜி.யின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தினார். பங்கேற்பாளர்கள் தங்கள் நாடுகளில் கற்றல்களை செயல்படுத்தவும், எந்தவொரு வழிகாட்டுதலுக்கும்  என்.சி.ஜி.ஜி- ஐ அணுகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த அமர்வின் தலைமை விருந்தினரான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்வுத் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை” என்ற இந்தியாவின் கொள்கைக்கு ஏற்ப, பொதுச் சேவை வழங்கலில் டிஜிட்டல் மயமாக்கலின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்தினார். டிஜிட்டல் கருவிகள் மூலம் சேவை வழங்கலில் கடைசி மைல் வரை சென்றடைவதில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பேசிய அவர், கொள்முதல், நிதிநுட்பம் மற்றும் குறை தீர்ப்புக்கான சிபிஜிஏஆர்ஏ ஆகியவற்றில் வெற்றிகரமான நிர்வாக மாதிரிகளை எடுத்துரைத்தார், அவை பொதுச் சேவைகளை ஒழுங்குபடுத்தியுள்ளன. நாடுகளுக்கிடையேயான சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் பரஸ்பர கற்றல் குறித்து அவர் வலியுறுத்தினார்.

இலங்கை, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயிற்சித் திட்ட பங்கேற்பாளர்கள் இந்தத் திட்டத்தை வழிநடத்தியதற்காக என்.சி.ஜி.ஜி.க்கு நன்றி தெரிவித்தனர். பங்கேற்பாளர்கள் தங்கள் முக்கிய கற்றல்களையும், அந்தந்த நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு சேவை செய்ய இந்த திட்டம் எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

.என்.சி.ஜி.ஜி இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5000கும் அதிகமான  மூத்த மற்றும் இடைக்கால அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய மையம், இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. பல ஆண்டுகளாக, பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, சீஷெல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூட்டான், மியான்மர், எத்தியோப்பியா, எரித்திரியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, மடகாஸ்கர், பிஜி, மொசாம்பிக் மற்றும் கம்போடியா போன்ற 33 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த மையம் வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளது.

Leave a Reply