சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, ஒற்றுமை உணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை கௌரவிக்கும் வகையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நாடு தழுவிய “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லி மற்றும் முக்கிய துறைமுகங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.
மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் குவஹாத்தியில் நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்றார். கொல்கத்தா துறைமுகத்தால் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் தலைமை தாங்கினார். புதுதில்லியில் நடைபெற்ற இதே போன்ற நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் பங்கேற்றார். இதில் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள், யோகா ஆர்வலர்கள், மூத்த குடிமக்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புகழ்பெற்ற சர்வதேச மாரத்தான் வீரரும் 1992 ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் வெற்றியாளருமான சுனிதா கோதாரா, ஒற்றுமை ஓட்டத்தை வழிநடத்தி ஊக்குவித்தார்.
மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தனது செய்தியில், “ஒற்றுமைக்கான ஓட்டம் என்பது வெறும் ஓட்டம் அல்ல, ஒன்றுபட்ட இந்தியா குறித்த சர்தார் படேலின் பார்வையை நிலைநிறுத்துவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு. இந்த நிகழ்வின் மூலம், நமது ஒற்றுமையில் உள்ள வலிமையையும், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தையும் நாம் நினைவூட்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்.பிரபாகரன்