முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தலைமையிலான இந்திய ராணுவ உயர்மட்டக் குழு, 2024 அக்டோபர் 31 முதல் நவம்பர் 03 வரை அல்ஜீரியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது இந்தியா-அல்ஜீரியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்தது.
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜெனரல் அனில் சவுகான் மற்றும் அல்ஜீரிய மக்கள் தேசிய இராணுவத்தின் தலைமைத் தளபதி சயீத் சானெக்ரிஹா ஆகியோர், இந்தியா மற்றும் அல்ஜீரியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பில் ஒரு முன்னோக்கிய அடியை எடுத்து வைப்பது மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் நீண்டகால ஒத்துழைப்புக்கான அடித்தளத்தையும் அமைக்கிறது.
அல்ஜீரியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமான அல்ஜீரியாவின் புகழ்பெற்ற புரட்சியின் 70வதுஆண்டு நிறைவைக் குறிக்கும் 01 நவம்பர் 2024 அன்று இராணுவ அணிவகுப்பு மற்றும் நினைவு நிகழ்வுகளின் உயர் தரங்களுக்காக சி.டி.எஸ் ஜெனரல் சையத் சானேக்ரிஹாவை, ஜெனரல் அனில் சௌஹான் பாராட்டினார்.
ஜெனரல் சவுகான், உயர் போர்நுட்பக் கல்லூரியின் இயக்குநருடன் உரையாடியதுடன், மக்கள் தேசிய இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடையேயும் உரையாற்றினார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றை சுட்டிக் காட்டிய அவர், ஒத்த மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பிணைப்பு காணப்படுவதாகக் கூறினார். அல்ஜீரியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் உலகளாவிய விருப்பங்களில், புவியியலின் தன்மையை அனில் சௌஹான் எடுத்துரைத்தார். ஒரு நாட்டின் முக்கிய ராணுவ உத்தி, அதன் புவியியல் மற்றும் வரலாற்று அனுபவத்தால் வடிவமைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா