சென்னைத் துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று சென்னை வந்தார். ரூ.187.33 கோடி முதலீட்டிலான ஒருங்கிணைந்த இந்தத் திட்டங்கள் துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும், இந்தியாவின் பசுமை துறைமுக முயற்சிகளை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளன.
துறைமுகங்களை நவீனமயமாக்குவதிலும் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவதிலும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை தமது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவை முக்கியமான நாடாக நிலைநிறுத்துவதில் இந்தத் திட்டங்களின் பங்கினை அவர் வலியுறுத்தினார்.
சென்னை துறைமுகத்தில் ரூ.73.91 கோடி திட்ட செலவில் நான்கு புதிய ஏற்றுமதி-இறக்குமதி கிடங்குகள் கட்டுவது உட்பட சீரிய பலன்கள் தரும் பல்வேறு திட்டங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். 18,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கிடங்குகள், பிரத்யேகமான, சுத்தமான, மூடப்பட்ட வகையிலான சேமிப்பு முறைகள் தேவைப்படும் விவசாய பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட முக்கிய சரக்குகளுக்கு அத்தியாவசிய சேவையை வழங்கும். சாகர்மாலா திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்படும் இந்த திட்டம், வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக முக்கிய துறைமுகங்களில் தனது வர்த்தக திறனை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் இலக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. கிடங்குகள் தவிர, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் கடற்கரை சாலையையும் அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது 350 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டது. ரூ. 4 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட இச்சாலை, சென்னை துறைமுகத்தில் உள்ள இரண்டாவது சரக்குப் பெட்டக முனையத்திற்கு கனரக சரக்குகளையும் சரக்குப் பெட்டகங்களையும் எளிதாக எடுத்துச் செல்ல உதவுகிறது. புதிய சாலையானது அணுகலை மேம்படுத்துகிறது, தூசு மாசுபாட்டைக் குறைக்கிறது, சுற்றுச்சூழல் இணக்கத்தை ஊக்குவிக்கிறது. துறைமுக உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இது குறிக்கிறது.
திறமையான போக்குவரத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், ரூ.88.91 கோடி மொத்த முதலீட்டில் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் தெற்கு ரயில்வே இணைப்பை இரட்டை ரயில்பாதையாக மாற்றும் திட்டத்தை திரு சோனாவால் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக தேவைகளுக்கு ஏற்ப இந்த விரிவாக்கம் 2.65 கி.மீ ரயில் பாதையை கூடுதலாக்குகிறது. இதில் கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் மீது மூன்று புதிய ரயில் பாலங்கள் கட்டப்படுவதும், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை இண்டர்லாக்டு கிராசிங்குகளாக மாற்றுவதும் உள்ளடங்கும். இந்த திட்டம் துறைமுகத்தின் ரயில் கையாளுதல் திறனை நாளொன்றுக்கு 22 முதல் 44 ரேக்குகளாக அதிகரிக்கும். இது துறைமுகத்திற்குள் வேகமான, பாதுகாப்பான சரக்கு இயக்கத்தை அனுமதிக்கும். காமராஜர் துறைமுக நிறுவனத்தில் ரூ.20.51 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்களுக்கான கரையோர மின்சார வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தியாவின் பசுமை துறைமுக வழிகாட்டுதல்களுடன் இணைந்து, இந்த வசதி சரக்குப் பெட்டகத் தளம் 1, சரக்குப் பெட்டகத் தளம் 2 பெர்த்களில் கரையோர சக்தியை வழங்குகிறது. கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது மற்றும் டீசல் என்ஜின்களை சார்ந்திராமல் கப்பல்களை இயக்க அனுமதிக்கிறது. இதனால் தூய்மையான, மிகவும் சிக்கனமான செயல்பாட்டு சூழலுக்கு உதவுகிறது.
எம்.பிரபாகரன்