மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (ஐ.ஆர்.இ.எல்) மற்றும் கஜகஸ்தானின் உச்ட்- கமேனோகோர்ஸ்க் டைட்டானியம் மற்றும் மெக்னீசியம் பிளான்ட் ஜே.எஸ்.சி ஆகிய இரண்டும் சேர்ந்து இந்தோ-கசாக் கூட்டு நிறுவனத்தை (ஜே.வி.சி) நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஐ.ஆர்.இ.யு.கே டைட்டானியம் லிமிடெட், இந்தியாவில் டைட்டானியம் ஸ்லாக்-ஐ உற்பத்தி செய்யும். ஐ.ஆர்.இ.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபேந்திர சிங் மற்றும் கஜகஸ்தான் நாட்டு நிறுவனத்தின் தலைவர் திருமதி அசெம் மமுடோவா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய அணுசக்தி ஆணைய தலைவரும் அணுசக்தி துறையின் செயலாளருமான டாக்டர் ஏ.கே. மொஹந்தி, கஜகஸ்தான் குடியரசின் தொழில் மற்றும் கட்டுமான துணை அமைச்சர் திரு. ஈரான் ஷர்கான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
கூட்டு நிறுவனமானது, இந்தியாவிற்குள் டைட்டானியம் மதிப்புக் கூட்டல் சங்கிலியை மேம்படுத்துவதில் ஒரு ஊக்கியாக செயல்படும். இது குறைந்த தரத்தில் உள்ள இல்மனைட்டை உயர் தர மூலப் பொருளாக மாற்றும் மற்றும் ஒடிசா மாநிலத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு நிறுவனம், இரு நிறுவனங்களின் பிராண்ட் ஈக்விட்டியை மேம்படுத்துவதோடு, டைட்டானியம் மதிப்புச் சங்கிலியில் இந்தியா மற்றும் கஜகஸ்தானுக்கான வளர்ச்சி இயந்திரமாகவும் செயல்படும்.
ஒடிசாவிலிருந்து ஐ.ஆர்.இ.எல் -இன் இல்மனைட்டைப் பயன்படுத்தி டைட்டானியம் ஸ்லாக் உற்பத்தி செய்வதற்கான ஆலையை டைட்டானியம் மதிப்புச் சங்கிலியில் நிறுவுவதன் மூலம், அந்தந்த நிறுவனங்களின் வலிமையை ஒருங்கிணைக்க கூட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது . கஜகஸ்தான் நாட்டு நிறுவனம் டைட்டானியம் ஸ்லாக்-ஐ உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வழங்கும்.
நிகழ்ச்சியில் பேசிய அணுசக்தித் துறை செயலாளர் டாக்டர் ஏ.கே. மொஹந்தி, ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். மேலும், அணுசக்தித் துறையின் பவள விழாவைக் கொண்டாடும் வேளையில் புதிய கூட்டு நிறுவனம் உருவாகவிருப்பது, டைட்டானியம் ஸ்லாக் உற்பத்தித் துறையில் நாடு தன்னிறைவை அடைவதற்கு வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திவாஹர்