ஐரோப்பிய ஒன்றியத்தின் புரோபா-3 விண்வெளி செயற்கைக்கோளை டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா விண்ணில் செலுத்த உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார். இது இந்தியாஉலகளாவிய விண்வெளித் துறையில் தலைமையிடத்தில் வளர்ந்து வருவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது, இதை 3 வது இந்திய விண்வெளி மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை இது காட்டுகிறது என்றார். சூரியனை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பணி, சர்வதேச விண்வெளி பயணங்களில் நம்பகமான கூட்டாண்மையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) நற்பெயரை வலுப்படுத்தும் அதே வேளையில், விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டையும் குறிக்கும். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்த புரோபா-3 செயற்கைக்கோள், சூரியனைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் பிற முக்கிய விண்வெளி சக்திகளுக்கும் இடையிலான சமமான ஒத்துழைப்பின் புதிய மட்டத்தை இது பிரதிபலிக்கிறது.
புரோபா-3 செயற்கைக்கோள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் மூன்றாவது ஏவுதலாகும். இந்தப் பணி சூரியக் கண்காணிப்பில் கவனம் செலுத்துவதில் தனித்துவமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கினார். “இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்து சூரியனை அணுகுகின்றன” என்று டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த இயக்கத்தின் அடையாளத்தையும் அறிவியலையும் எடுத்துரைத்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனை கொள்கை மாற்றங்களை இந்தியாவின் விண்வெளித் துறையின் விரைவான மாற்றத்துடன் இணைத்து பாராட்டினார். 2020 சீர்திருத்தங்கள் தனியார் பங்கேற்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான கதவுகளைத் திறந்தன, இது இந்தியாவின் விண்வெளி திறனைப் பறைச்சாற்றியது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சுஹோரா டெக்னாலஜிஸ் உருவாக்கிய புதுமையான தயாரிப்பான ஸ்பேட் ஐ வெளியிட்டு மதிப்புமிக்க ISpA விண்வெளி தொழில் விருதுகளை வழங்கினார். தொடக்க அமர்வைத் தொடர்ந்து, அதிநவீன விண்வெளி தயாரிப்புகளைக் கொண்ட கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார், பிரமுகர்களுடன் உரையாடிய அவர், விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தினார்.
தொடக்க அமர்வில் இந்திய விண்வெளி சங்கத்தின் (ஐ.எஸ்.பி.ஏ) தலைவர் ஜெயந்த் பாட்டீல், இஸ்ரோ தலைவர் சோம்நாத், உட்பட விண்வெளித் துறையின் முக்கிய நிபுணர்கள் பங்கேற்றனர்.
எஸ்.சதிஸ் சர்மா