ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் உள்ள 10 மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய நிதி – கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெற்றது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரியும் மூத்த அதிகாரிகளும், நபார்டு, சிட்பி ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
10 மண்டல ஊரக வங்கிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல், விவசாயக் கடன், சிறு தொழில்துறை கடன்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, முத்ரா, பிரதமரின் விஸ்வகர்மா போன்ற மத்திய அரசின் பல்வேறு முதன்மைத் திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதை மண்டல ஊரக வங்கிகள், அவற்றின் ஆதரவு வங்கிகளின் உதவியுடன் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அடித்தள அளவிலான வேளாண் கடன் வழங்கலில் மண்டல ஊரக வங்கிகள் தங்கள் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் கூறினார். தென் மண்டலத்தில் உள்ள இந்த வங்கிகள் 2024-ம் நிதியாண்டில் ரூ. 3,816 கோடி ஒருங்கிணைந்த லாபத்தை பதிவு செய்துள்ளன என்றும் இது அனைத்து மண்டல ஊரக வங்கிகளின் ஒருங்கிணைந்த லாபத்தில் 50% க்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஒரு மாநிலம் – ஒரே மண்டல ஊரக வங்கி (RRB)’ என்ற கொள்கையின் அடிப்படையில் மண்டல ஊரக வங்கிகளை இணைப்பதற்கான முன்மொழிவு குறித்து மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு வைப்புகளை (CASA) மேம்படுத்துவதன் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைகள் தொடர்பான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, மத்திய அரசின் நிதி உள்ளடக்கத் திட்டங்களின் சாதனைகளுக்கு வங்கிகள் அதிகபட்சமாக பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா