உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்’ நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையின் கீழ் உத்தராகண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்னதைக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அந்தக் கனவுகளும், விருப்பங்களும் இன்று நனவாவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தற்போதைய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போதைய பத்து ஆண்டுகள் உத்தராகண்ட் மாநிலத்துக்கானது என்று குறிப்பிட்ட பிரதமர், பல நம்பிக்கைகள் கடந்த ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். வளர்ச்சியில் உத்தராகண்ட் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது எனவும் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது எனவும் குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் அடிப்படையில் உத்தராகண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிவித்தார். ‘எளிதாக வர்த்தகம் செய்தல்’ பிரிவில் உத்தராகண்ட் ‘சாதனையாளர்கள்’ என்ற பிரிவிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் பிரிவில் ‘தலைவர்கள்’ என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். 2014-ல் ரூ.1.25 லட்சமாக இருந்த தனிநபர் வருமானம் ரூ.2.60 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 2014-ல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள், பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான தெளிவான அறிகுறியாக இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் 5 சதவீத வீடுகளில் இருந்து இன்று 96 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வசதி அதிகரித்துள்ளது என்றும், கிராமப்புற சாலைகள் கட்டுமானம் 6,000 கிலோமீட்டரிலிருந்து 20,000 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டுதல், மின்சார விநியோகம், எரிவாயு இணைப்புகள், இலவச சிகிச்சை ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அரசு துணை நிற்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய மானியம் ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவித்த பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயற்கைக்கோள் மையம், ட்ரோன் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம், உத்தம் சிங் நகரில் சிறிய தொழில் நகரியம் ஆகியவற்றை நிறுவி சாதனை படைக்கப்பட்டதையும் பட்டியலிட்டார். மாநிலத்தில் ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டத்தை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். உத்தரகண்டில் உள்ள 11 ரயில் நிலையங்கள் அம்ரித் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிவேக நெடுஞ்சாலை நிறைவடைந்த பின்னர் தில்லி – டேராடூன் இடையேயான பயண நேரம் 2.5 மணி நேரமாகக் குறையும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த வளர்ச்சி, மக்களின் இடப்பெயர்வையும் தடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்