விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வு மேற்கொண்டார். நேற்று கன்னிசேரி புதூரில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். 2வது நாளாக இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:விருதுநகர் பெயரை சொன்னதும் காமராஜர் நினைவுக்கு வருவார். காமராஜர் பெயர் சொன்னால் பல நினைவுகள் வரும். எனது திருமணத்திற்கு காமராஜர் வருகை தர அவரது இல்லம் தேடி சென்று கலைஞர் அழைப்பு விடுத்தார். உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் திருமணத்திற்கு வந்து என்னையும், என் மனைவியையும் வாழ்த்தினார்.

காமராஜர் மறைந்தபோது, மகன்போல் இறுதி நிகழ்ச்சி நடத்தியவர் கலைஞர். அரசு மரியாதையுடன் உடல் அடக்கம், காமராஜருக்கு சென்னையில் சாலை, நெல்லையில் சிலை, காமராஜரின் செயலாளர் வைரவனுக்கு பணி, வீடு ஒதுக்கப்பட்டது. காமராஜர் சகோதரி நாகம்மாளுக்கு கலைஞர் நிதியுதவி வழங்கினார். காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து போற்றினார்.

Leave a Reply