பாரத் என்சிஎக்ஸ் 2024 அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது: இந்தியா முழுவதும் இணைய பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த முடிவெடுத்தலை வலுப்படுத்துதல்.

இந்தியாவின் இணைய பாதுகாப்பு எழுச்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல் முயற்சியான பாரத் தேசிய இணைய பாதுகாப்பு ஒத்திகை (பாரத் என்சிஎக்ஸ் 2024),ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் (RRU) இணைந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட விழாவில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேம்பட்ட இணைய பாதுகாப்பு, தாக்குதல் சம்பவத்துக்கான எதிர்வினை திறன்கள் மற்றும் உத்திசார் முடிவெடுத்தல் ஆகியவற்றுடன், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, இந்தியாவின் இணைய பாதுகாப்பு வல்லுநர்களையும் தலைமைத்துவ நிபுணர்களையும் தயார்படுத்துவதில், இந்த 12 நாள் பயிற்சி ஒரு முக்கியமான படியாகும்.

இதில் தொடக்க உரையாற்றிய, தேசிய இணைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு.நாயர், பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம் (ஓய்வு), “பாரத் என்சிஎக்ஸ் 2024 நம் நாட்டின் சைபர் பாதுகாவலர்கள் மற்றும் தலைவர்களை, சிக்கலான அச்சுறுத்தல்களைத் தணிக்கும் திறன்களுடன் ஆயத்தப்படுத்துகிறது. தொழில்நுட்ப பயிற்சிகள் முதல் முடிவெடுப்பது வரை, இந்த முயற்சி அனைத்து மட்டங்களிலும் நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கான நமது தயார்நிலையை உறுதி செய்கிறது” என்றார்.

சிறப்புரையாற்றிய ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) பிமல் என்.படேல், இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை விரிவாக எடுத்துரைத்தார். “இந்தப் பயிற்சி தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவதுவதோடு மட்டுமல்லாமல், தகவலறிந்து முடிவெடுப்பதன் மூலம், தேசிய அளவிலான இணைய நெருக்கடிகளை வழிநடத்த தலைமைத்துவத்தை தயார்படுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரத் என்சிஎக்ஸ் 2024-ன் முக்கிய அம்சங்கள்: இந்தப் பயிற்சியில் இணைய பாதுகாப்பு மற்றும் தாக்குதல் சம்பவத்துக்கான எதிர்வினை , தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் தொழில்நுட்ப அமைப்புகள் மீதான இணைய  தாக்குதல்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்துதல், அரசு மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கான கூட்டு தளங்கள் உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.   பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளை ஒன்றிணைத்து, தேசிய அளவிலான இணைய நெருக்கடியின் போது  முடிவெடுப்பதை உருவகப்படுத்தி, உத்திசார் புத்திசாலித்தனத்துடன் உயர் அழுத்த சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் திறனை மேம்படுத்தும். சிஐஎஸ்ஓ மாநாட்டில் அரசு, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதுடன், குழு விவாதங்களிலும் பங்கேற்பதோடு, இணைய பாதுகாப்பில் சமீபத்திய போக்குகள் மற்றும் அரசாங்க முயற்சிகளை ஆராய்வார்கள்.  பாரத் இணைய பாதுகாப்பு புத்தொழில் கண்காட்சி இந்திய புத்தொழில்களின் புதுமையான தீர்வுகளை வெளிப்படுத்தும். நாட்டின் இணைய பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர்களின் பங்கை வலியுறுத்தும். இந்தப் பயிற்சி தலைமைத்துவ ஈடுபாடு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது, வளர்ந்து வரும் இணைய சவால்களுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை வளர்க்கிறது.

இந்த நிகழ்ச்சி, நவம்பர் 18 முதல் நவம்பர் 29, 2024 வரை நடைபெறும். இது கற்றுக்கொண்ட பாடங்களை ஒருங்கிணைக்கவும், இணைய பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும் ஒரு விரிவான விளக்கத்துடன்  நிறைவடையும்.

Leave a Reply