சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள குரு காசிதாஸ் – தாமோர் பிங்லா புலிகள் காப்பகம், நாட்டின் 56-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், புலிகளைப் பாதுகாப்பதில் இந்தியா தொடர்ந்து புதிய உச்சங்களை அடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 2,829 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள குருகாசிதாஸ் – தாமோர் பிங்லா புலிகள் காப்பகம் நாட்டிலேயே மூன்றாவது பெரிய புலிகள் காப்பகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் காப்பகம் மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளைக் கொண்டிருப்பதன் மூலம் பல்லுயிர் புகலிடமாகவும், புலிகளுக்கான முக்கியமான வாழ்விடமாகவும் திகழ்கிறது. மேலும் இந்தக் காப்பகத்தில், 388 முதுகெலும்புள்ள உயிரினங்களும், 365 முதுகெலும்பில்லாத உயிரினங்கள் என மொத்தம் 753 வகையான உயிரினங்கள் உள்ளன. முதுகெலும்புள்ள உயிரினங்களில் 230 வகையான பறவை இனங்களும், 55 வகையான பாலூட்டிகளும் அடங்கும். குருகாசிதாஸ் – தாமோர் பிங்லா புலிகள் காப்பகத்துடன் சேர்த்து சத்தீஸ்கரில் மொத்தம் 4 புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நாகார்ஜூன சாகர் – ஸ்ரீ சைலம் புலிகள் காப்பகம் நாட்டிலேயே மிகப் பெரிய புலிகள் காப்பகமாகவும், அசாமில் உள்ள மனாஸ் புலிகள் காப்பகம் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகமாகவும் இந்த குருகாசிதாஸ் – தாமோர் பிங்லா புலிகள் காப்பகம் மூன்றாவதாக
உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்