பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார்.
வளர்ச்சியில் ஒத்துழைப்பு, தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகள் சிறப்பாக இருப்பது குறித்து பிரதமரும், பூடான் மன்னரும் திருப்தி தெரிவித்தனர். அனைத்து துறைகளிலும் இந்த முன்மாதிரியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார தொடர்பை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், பூடானின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் அருகிலுள்ள எல்லைப் பகுதிகளுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் பூடான் மன்னரால் முன்மொழியப்பட்ட தொலைநோக்குத் திட்டமான கெலெபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி முன்முயற்சி குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பூடானின் 13-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பூடானுக்கான வளர்ச்சி ஆதரவை இரட்டிப்பாக்கியதை சுட்டிக்காட்டிய பிரதமர், பூடானின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் வலுவான ஆதரவை மீண்டும் உறுதி செய்தார். மகிழ்ச்சி, மேம்பாடு, செழிப்புக்கான பூடானின் விருப்பங்களுக்கு உறுதியான ஆதரவு அளித்ததற்காக பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் பூடான் மன்னர் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, பூடான் மன்னரையும், ராணியையும் கௌரவிக்கும் வகையில் பிரதமர் மதிய விருந்தளித்தார்.
இந்தியா – பூடான் இடையேயான வழக்கமான உயர்மட்ட பரிமாற்றங்களின் பாரம்பரியத்தை இந்த கூட்டம் எடுத்துக்காட்டியது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு அடிப்படையான பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு, ஆழமான புரிதல் ஆகியவற்றின் உணர்வை பிரதிபலிக்கிறது.
எம்.பிரபாகரன்