ராய்ரங்கபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்.

குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு ஒடிசாவில் பாங்கிரிபோசி-கொருமாஹிசானி, புராமரா-சாக்குலியா, பதம்பஹர்-கெந்துஜர்கர் ஆகிய மூன்று ரயில் பாதைத் திட்டங்களுக்கு இன்று (07.12.2024) அடிக்கல் நாட்டினார். அத்துடன் பழங்குடியினர் ஆராய்ச்சி – மேம்பாட்டு மையம், டான்ட்போஸ் விமான நிலையம், ஒடிசாவின் ராய்ரங்பூரில் உள்ள துணைப்பிரிவு மருத்துவமனையின் புதிய கட்டடம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்த மண்ணின் மகள் என்பதில் தான் எப்போதும் பெருமை கொள்வதாகக் கூறினார். பொறுப்புகள், வேலை பளுமிக்க சூழல் போன்றவை தம்மை பிறந்த இடத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் ஒருபோதும் விலக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். மாறாக, மக்களின் அன்பு அவர்களை நோக்கி தம்மை இழுப்பதாக அவர் கூறினார். ஒடிசா பகுதி மக்களின் தூய்மையான, ஆழமான பாசம் எப்போதும் தமது மனதில் எதிரொலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ரயில் திட்டங்கள், விமான நிலையங்கள் இந்த பிராந்தியத்தில் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். 100 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டடம் உள்ளூர் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் என அவர் கூறினார்.

மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டத்தால் ஒடிசா மாநிலம் பயனடைந்து வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலா, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நலத்திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது என அவர் கூறினார்.

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 23 பள்ளிகள் உட்பட ஒடிசாவில் 100-க்கும் மேற்பட்ட புதிய ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் பள்ளிகளில் கல்வியைப் பெறும் பழங்குடியினக் குழந்தைகள், நாட்டின் முன்னேற்றத்திற்கு தரமான பங்களிப்பை வழங்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Leave a Reply