ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 17, 2024) கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் முதல் பேட்ச் மாணவர்கள்தான் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை உருவாக்குகின்றனர்என்று கூறினார். முதல் பேட்ச் எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளிடம் பேசிய அவர், சமூகம், நாடு மற்றும் வெளிநாடுகளில் எய்ம்ஸ் மங்களகிரியின் முதல் தூதுவர்கள் நுங்கள்தான் என்று கூறினார்.
மருத்துவத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், மனித சமுதாயத்திற்கு சேவை செய்யும் பாதையை மருத்துவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று குடியரசுத் தலைவர் மருத்துவர்களிடம் கூறினார். வெற்றி மற்றும் மரியாதையை அடைய சேவை மனப்பான்மை, கற்றல் மனப்பான்மை மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை ஆகிய மூன்று பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்திய மருத்துவர்கள் தங்களது திறமை மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் உலகின் வளர்ந்த நாடுகளில் முன்னணி இடத்தை அடைந்துள்ளனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்றும், உலக அரங்கில் குறைவான கட்டணத்தில் மருத்துவ சுற்றுலாவின் முக்கிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்ட அவர், இந்த வளர்ச்சியில் மருத்துவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
திவாஹர்