வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீடு செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வேண்டுகோள்.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், மும்பையில் வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சாலைப் பேரணியை  நடத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு வருட கால தொடர் சாலைப் பேரணிகளைத் தொடர்ந்து, மும்பையில் நடந்த இந்த சாலைப் பேரணியானது இந்தியாவின் பொருளாதார மையத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா,  திரிபுரா முதல்வர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா,மேகாலயா முதலமைச்சர் திரு. கான்ராட் கே. சங்மா, மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு. சஞ்சல் குமார், மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு மோனாலிசா டாஷ், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அமைச்சகத்தின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, பிரதமரின் தலைமையின் கீழ் ஏற்பட்டுள்ள வடகிழக்கு இந்தியாவின் மாற்றத்தைப் பாராட்டியதுடன், கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்திய  பிராந்திய முதலமைச்சர்களின் தலைமையைப் புகழ்ந்தார். இந்த மண்டலத்தின் அபரிமிதமான திறனை வலியுறுத்திய அவர், தற்போது பாராட்டத்தக்க வகையில் 11%உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்துடன் இந்தியாவின் வளர்ச்சியில் தனது பங்கினை அளிக்க இந்தப் பிராந்தியம் தயாராக உள்ளது என்றார்.  உள்கட்டமைப்பு, மனித வளம் மற்றும் சிறப்புத் துறைகளின் வளர்ச்சி வடகிழக்கு இந்தியாவை நாட்டின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக நிலைநிறுத்தியுள்ளது. பிராந்தியத்தின் தனித்துவமான நன்மைகளை எடுத்துரைத்த அவர், வடகிழக்கு  பிராந்தியம் ஒரு நுழைவாயில் என்றும், தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்கு அணுகலை வழங்குகிறது என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மும்பை மற்றும் வடகிழக்கு இந்தியாவின் செயலூக்கமான வர்த்தக சூழல்களுக்கு இடையே இணைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். இதன் மூலம் வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான தடையற்ற பாதையை உறுதி செய்தார். சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிராந்தியத்தின் முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டிய அமைச்சர், பிராந்தியத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட்ட தரம் சார்ந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார். பிராந்தியத்தின் இளைஞர்கள், அதிக கல்வியறிவு விகிதங்கள் மற்றும் ஏராளமான இயற்கை வளங்கள் ஆகியவை முதலீட்டிற்கான சிறந்த இடமாக அமைகின்றன. குறிப்பாக நிலையான விவசாயம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக அமைகிறது என்று அவர் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார். வடகிழக்கு பிராந்தியத்திள் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து, பிராந்தியத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply