விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் இன்று (2024 டிசம்பர் 18) பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2-வது அதிநவீன ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் நிர்தேஷக் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த கப்பல் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுகளை நடத்தவும், வழிசெலுத்தலில் உதவவும், கடல்சார் நடவடிக்கைகளை ஆதரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர், மிகவும் சிறப்பு வாய்ந்த கப்பல்களான ஆய்வுக் கப்பல்கள் பெருங்கடல்களை ஆய்வு செய்து செயல் திட்டங்களை வகுக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.
80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு வடிவமைப்பு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்ட ஐஎன்எஸ் நிர்தேஷக் கப்பல் மல்டி பீம் எக்கோ சவுண்டர்கள், சைட் ஸ்கேன் சோனார்கள், நீருக்கடியில் செயல்படும் தானியங்கி வாகன செயல்பாடு, ரிமோட் இயக்கப்படும் வாகன செயல்பாடு போன்ற மேம்பட்ட ஹைட்ரோகிராஃபிக் அமைப்புகளுடன் உள்ளதாக அவர் கூறினார். இவை ஆழ்கடல் நடவடிக்கைகளில் பாதுகாப்பான வழிசெலுத்தல், திட்டமிடல் ஆகியவற்றிற்கு துல்லியமான தகவல்களை வழங்கும் என்று பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தெரிவித்தார்.
திவாஹர்