போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பையும் பிற அமலாக்க முகமைகளையும் வலுப்படுத்தி போதை பொருட்கள் தடுப்புச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்ய மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அவற்றில் சில: –

மத்திய, மாநில முகமைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக 4 அடுக்கு போதைப் பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு மைய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்திலும் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமான, குறிப்பிடத்தக்க போதைப் பொருள் கைப்பற்றல்களின் புலனாய்வை கண்காணிக்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர் தலைமையில் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லைகளில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு தேடுதல், பறிமுதல் செய்தல், கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பாதைகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படைக்கு   அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடலோர, ஆழ்கடல் பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடலோர காவல்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த கடற்படை, கடலோரக்  காவல்படை,   எல்லைப்  பாதுகாப்புப்  படை, மாநில அமைப்புகள் போன்றவற்றுடன்  தேசிய போதைப்   பொருள் தடுப்பு அமைப்பு ஒருங்கிணைந்து  கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நாட்டின் போதைப்பொருள் சட்ட அமலாக்க நிறுவனங்களின் திறனை வளர்ப்பதற்காக, தேசிய  போதைப்பொருள்  தடுப்பு அமைப்பு   சட்ட அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply