மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், திருச்சி மாவட்டம்.
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அந்த வகையில் U-WIN APP செயலி பதிவேற்றக் கட்டாய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று (28.12.2024) காலை 9.30 மணிக்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநரிடம் தங்களது கோரிக்கையை தெரிவிப்பதற்கு வந்தனர். ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தனது அலுவலகத்தில் கூடியிருப்பதை தனது அலுவலக பணியாளர்கள் மூலம் தெரிந்து கொண்ட துணை இயக்குநர்; செவிலியர்களை சந்திப்பதை தவிர்த்து இன்று நாள் முழுவதும் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வராமல் அவர் தவிர்த்து விட்டார். இதனால் விரக்தி அடைந்த செவிலியர்கள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்திலேயே இன்று (28.12.2024) இரவு 8 மணி வரை துணை இயக்குநர் வருகைக்காக இலவு காத்த கிளி போல அங்கேயே காத்திருந்தனர்.
இரவு நேரமாகியும் செவிலியர்கள் அங்கு காத்திருப்பதை அறிந்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கே வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் சிலரும் வந்தனர்.
காலையிலிருந்து காத்திருக்கிறோம். இரவு எத்தனை மணி ஆனாலும் பரவாயில்லை. துணை இயக்குநரை சந்திக்காமல் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று செவிலியர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
இதை தனது அலுவலக பணியாளர்கள் மூலம் தெரிந்து கொண்ட துணை இயக்குநர்; வேறு வழியின்றி இன்று (28.12.2024) இரவு 8 மணியளவில் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அவர் வந்து சேர்ந்தார்.
இன்று காலை பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி துணை இயக்குநர் செவிலியர்களை சந்தித்து இருந்தால் இப்படி 10 மணி நேரம் செவிலியர்கள் அங்கே காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. துணை இயக்குநரின் பிடிவாதம், அலட்சியம் தான் இதற்கு முக்கிய காரணம். இதுபோன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செவிலியர்களின் கோரிக்கை தான் என்ன? இதோ அதைப்பற்றி நமது செய்தி குழு சேகரித்த விரிவான விவரத்தைப் பார்ப்போம்.
Self_Registration_Module_U-WIN_SOP_v2_Apr_2024-1
இந்தியாவில் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (UIP) என்பது தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களில் ஒன்றாகும், இதன் கீழ் அனைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை டிஜிட்டல் மூலம் பதிவு செய்வதற்காக U-WIN APP என்ற செயலியை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த U-WIN செயலி மூலம் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒவ்வொரு தடுப்பூசி நிகழ்வையும் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) கீழ் பதிவு செய்ய ஆரம்ப சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே வேலைப்பளுவில் தவித்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள்; இந்த U-WIN செயலி பதிவேற்றும் கட்டாய பணி உத்தரவால் மேலும் கூடுதல் பணி சுமைக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அன்றாடம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் பணி நேரம் வெகுவாக பாதிக்கப்படும்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் அனைவரும் U -WIN APP போன்ற டிஜிட்டல் செயலிகளில் பதிவேற்றம் செய்யும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதை செய்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் அல்லது மூன்றாவது நபர்களின் உதவியை அவர்கள் நாட வேண்டிய நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் மருத்துவ புள்ளி விவர ரகசியங்கள் எளிதாக வெளியில் கசியும் ஆபத்து உள்ளது.
எனவே, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமனம் செய்து இது போன்ற டிஜிட்டல் பதிவேற்றம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் மக்களுக்கு முழுமையான மருத்துவ சேவை செய்ய முடியும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் செய்யக்கூடிய வேலைகளையும் செவிலியர்களே செய்ய கட்டாயப்படுத்தினால், மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் பணி நேரம் வெகுவாக பாதிக்கப்படும்.
–கே.பி.சுகுமார்., B.E., Special correspondent UTL MEDIA TEAM