புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் இணையதளத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (07.01.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது, விருது பெற்ற 35 சிபிஐ அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கங்களையும் திரு அமித் ஷா வழங்கினார், அவர்களுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், புலனாய்வில் சிறந்து விளங்கியதற்கான உள்துறை அமைச்சரின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர், சிபிஐ இயக்குனர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பாரத்போல் தொடங்கப்பட்டதன் மூலம் சர்வதேச விசாரணையில் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது என்றார். பாரத்போல் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முகமையும், காவல் துறையும் இன்டர்போலுடன் தடையின்றி தொடர்பு கொள்ள முடியும் என்றும், அதன் மூலம் விசாரணைகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாம் முன்னோக்கிச் செல்லும்போதும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும்போதும் நமது அமைப்புகள், வழிமுறைகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு அமித் ஷா வலியுறுத்தினார். பாரத்போல் அந்த திசையில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார்.
பாரத்போலின் ஐந்து முக்கிய தொகுதிகளான இணைப்பு, இன்டர்போல் அறிவிப்புகள், குறிப்புகள், ஒலிபரப்பு, வளங்கள் ஆகியவை நமது அனைத்து சட்ட அமலாக்க முகமைகளுக்கும் ஆதரவளிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்ப தளத்தை வழங்குகின்றன என்று திரு அமித் ஷா கூறினார். 195 நாடுகளில் இருந்து பெறப்படும் இன்டர்போல் குறிப்புகள் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும்விசாரணைகளுக்கு சர்வதேச உதவியை நாடுவதையும் வழங்குவதையும் எளிதாக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.
இந்தியாவில் குற்றங்களைச் செய்துவிட்டு பிற நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகள் இந்திய சட்டங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பாரத்போல் போன்ற நவீன அமைப்புகளை அமல்படுத்துவதன் மூலம், அத்தகைய குற்றவாளிகளை இப்போது நமது நீதியின் வரம்பிற்குள் கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில், தப்பியோடிய குற்றவாளிகள் தொடர்பான புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா கூறினார். இந்த விதிகள் குற்றவாளிகளை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.
திவாஹர்