ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே இன்று பார்வையிட்டார். கயாக்கிங், கேனோயிங், படகோட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு உள்ள பர்மிந்தர் சிங், பி.ரோஜி தேவி, எல்.நேஹா தேவி போன்ற நம் நாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களையும் உருவாக்குவதற்கான முக்கிய மையமாக இது உருவெடுத்துள்ளதற்கு இணையமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்திய ஆசிய விளையாட்டு, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களின் சிறப்பான செயல்திறனைப் பாராட்டிய இணை அமைச்சர், இந்த மதிப்புமிக்க மையத்தில் வழங்கப்பட்ட அதிநவீன விளையாட்டு அறிவியல் ஆதரவுடன்கூடிய பயிற்சி முறைக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், விளையாட்டுத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை இந்தியா காண்கிறது என்று கூறினார். கேலோ இந்தியா போன்ற புரட்சிகர முன்முயற்சிகள் இளம் விளையாட்டு வீரர்களுக்கு தடைகளை உடைத்து உலகளாவிய அங்கீகாரத்தை அடைய அதிகாரம் அளிக்கின்றன என்று அவர் தெரிவித்தார். ஜகத்பூரில் உள்ள தேசிய உயர்திறன் மையம் இந்த முயற்சிகளின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும், திறமைகளை மேம்படுத்தும் மற்றும் சாம்பியன்களை உருவாக்கும் ஒரு பயிற்சிக் களமாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவை பெருமைப்படுத்துவதில் பங்களிக்கும் ஜகத்பூரில் உள்ள இந்த மையத்தின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் முயற்சிகளை இணையமைச்சர் பாராட்டினார். நமது விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவை வழங்க இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு இணையமைச்சர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.
எம்.பிரபாகரன்