ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.
தலைமை விருந்தினரான டிரினிடாட் & டொபாகோ குடியரசின் அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூவுக்கு அவரது காணொலி செய்தியில் அன்பான வார்த்தைகளை தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அவர் பேசி வருவதாகவும், அவரது வார்த்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் உணர்வுப்பூர்வமான பண்டிகைகள், ஒன்று கூடல்களுக்கான நேரம் இது என்று குறிப்பிட்ட திரு மோடி, இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கும் என்றும், மகர சங்கராந்தி, லோஹ்ரி, பொங்கல், மாக் பிஹு ஆகிய பண்டிகைகள் வரவுள்ளன என்றும் கூறினார். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தியடிகள், 1915-ம் ஆண்டு இதே நாளில்தான் நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருந்தபிறகு இந்தியா திரும்பினார் என்பதை நினைவு கூர்ந்த திரு மோடி, இத்தகைய அற்புதமான தருணத்தில் இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வருகை பண்டிகை உணர்வை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தின் இந்தப் பதிப்பு மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பானது என்று கூறிய அவர், திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட சில நாட்களுக்குப் பின் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார். வெளிநாடுவாழ் இந்தியர் தினம் இந்தியாவுக்கும் அதன் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் தருணமாக மாறியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்தியா, இந்தியத்தன்மை, நமது கலாச்சாரம், முன்னேற்றம் ஆகியவற்றை நாம் ஒன்றாக கொண்டாடுவதோடு, நமது வேர்களுடனும் இணைவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நாம் கூடியிருக்கும் மகத்தான ஒடிசா, இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும் என்று திரு மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒடிசாவின் ஒவ்வொரு அடியிலும் நமது பாரம்பரியத்தைக் காண முடியும் என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கோ அல்லது கொனார்க்கில் உள்ள பிரம்மாண்டமான சூரியக் கோயிலுக்கோ அல்லது தாம்ரலிப்தி, மணிக்பட்னா, பாலூர் போன்ற புராதன துறைமுகங்களுக்கோ செல்லும்போது ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஒடிசாவைச் சேர்ந்த வர்த்தகர்கள், பாலி, சுமத்ரா, ஜாவா போன்ற இடங்களுக்கு நீண்ட கடல் பயணங்களை மேற்கொண்டனர் என்று கூறிய பிரதமர், பாலி யாத்திரையின் நினைவு இன்றும் கூட ஒடிசாவில் கொண்டாடப்படுகிறது என்றார். ஒடிசாவின் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று தலமான தௌலி அமைதியின் சின்னமாக விளங்குகிறது என்று அவர் மேலும் கூறினார். வாளின் சக்தியால் உலகம் பேரரசுகளை விரிவுபடுத்திக் கொண்டிருந்தபோது, சாம்ராட் அசோகர் இங்கு அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலம் போரில் அல்ல, புத்தரிடம் உள்ளது என்பதை உலகிற்கு இந்தியா தெரிவிக்க இந்த மரபு ஊக்கமளிக்கிறது என்று கூறிய திரு மோடி, ஒடிசாவுக்கு அனைவரையும் வரவேற்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களை தாம் எப்போதும் இந்தியாவின் தூதர்களாக கருதி வருவதாக பிரதமர் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை சந்திப்பதும் உரையாடுவதும் தமக்கு மகிழ்ச்சியானது என்று குறிப்பிட்ட அவர், அவர்களிடமிருந்து தாம் பெறும் அன்பும் ஆசீர்வாதங்களும் மறக்க முடியாதவை என்றார்.
இந்திய வம்சாவளியினருக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த திரு மோடி, உலக அரங்கில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க வாய்ப்பளித்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் பல உலகத் தலைவர்களை தாம் சந்தித்ததாகவும், அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் என்றும் அவர்களின் சமூக மதிப்புகளுக்காகவும், அந்தந்த சமூகங்களுக்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காகவும் அவர்களைத் தாம் பாராட்டியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
திவாஹர்