தமிழக அரசு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி கால தாமதம் செய்யாமல் போனஸ் வழங்க முன்வர வேண்டும்.
தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181 ன் படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இன்னும் அந்த கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொள்ளாதது ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
அதாவது 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு ஆகியவை கிடையாது என்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு தொகுப்பூதிய முறையை கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அப்போது தான் இனி இருக்கும் பணிக்காலத்திலாவது ஓரளவுக்கு அவர்களால் நிம்மதியாக பணியாற்ற முடியும்.
எனவே தமிழக அரசு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும், இனியும் கால தாமதம் செய்யாமல் அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா