முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தில்லி கண்டோன்மெண்டில் உள்ள தேசிய மாணவர் படையினரின் குடியரசு தின முகாமை இன்று (2025 ஜனவரி 13-ம் தேதி) பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தினார். நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் 27% உள்ளனர் என்றும் அவர் கூறினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். மாணவர் படையின் சாதனைகள், தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், நீர்நிலைகள் புனரமைப்புத் திட்டம், ஒரே பாரதம், உன்னத பாரதம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மாவ்லங்கர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை அவர் சுட்டிக்காட்டினார். அரசு மற்றும் சமூக அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் மாண்வர் படையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.
இளைஞர் தினம், படைவீரர் தினம், இராணுவ தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்கள் ஜனவரி மாதத்தில் வருவதால், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக உள்ளது என்று ஜெனரல் அனில் சவுகான் கூறினார். தேசிய மாணவர் படையினர், மக்கள் நலனுக்கான திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பை ஒருபோதும் கைவிடக்கூடாது என்றும் நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய மாணவர் படையின் மூன்று பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் படையினரின் ‘மரியாதை அணிவகுப்பை’ பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து கேரளாவின் நியூமன் கல்லூரி (பெண்கள்) இசைக்குழுவின் அற்புதமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு சமூக விழிப்புணர்வு தொடர்பான கருப்பொருள்கள் குறித்து அனைத்து 17 தேசிய மாணவர் படை இயக்குநரகங்களைச் சேர்ந்த மாணவர் படையினரால் தயாரிக்கப்பட்ட ‘கொடியையும்’ அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மெழுகில் செய்யப்பட்ட தத்ரூப சிலைகளையும் பார்வையிட்டார். அங்கு அவருக்கு தேசிய மாணவர் படையின் பயிற்சி மற்றும் வரலாற்றுச் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பிரதாப் அரங்கத்தில் மாணவர் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கலாச்சார நிகழ்ச்சியை’ முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா