மும்பை மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் இந்திய கடலோர காவல்படைக்கான பயிற்சிக் கப்பல் கட்டுமானப் பணி தொடக்க விழா நடைபெற்றது.

இந்திய கடலோர காவல்படைக்கான பயிற்சி கப்பலின் (யார்டு 16101) கட்டுமானப் பணி தொடக்க விழா இன்று (2025 ஜனவரி 13) மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்றது. 7,500 கடல் மைல் தூரம் செல்லக் கூடிய இந்த கப்பலில் பயிற்சி பெறுபவர்களுக்கான பயிற்சி தளம், உள்ளிட்ட கடலில் உயர்தர கற்றல் அனுபவத்தை உறுதி செய்வதற்காக பிரத்யேக வகுப்பறைகள் போன்ற சிறப்பு வசதிகள் இருக்கும். அடிப்படை பயிற்சிக்குப் பிறகு பெண் அதிகாரிகள் உட்பட 70 பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கு உயர் பயிற்சி அளிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கும்.

107 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் அதிகபட்சமாக 20 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்கணிப்பு பராமரிப்பு அமைப்புகள், பல்நோக்கு ட்ரோன், ஒருங்கிணைந்த தளம் அமைப்பு உள்ளிட்ட அதிநவீன இயந்திரங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளும் இதில் இடம்பெறும். இந்த விழாவுக்கு துணை தலைமை இயக்குநரும், (பொருள் மற்றும் பராமரிப்பு) தலைமை ஆய்வாளருமான எச்.கே.சர்மா தலைமை தாங்கினார். மசகான் கப்பல் கட்டும் நிறுவன இயக்குநர் (கப்பல் கட்டுதல்) முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், அந்நிறுவன உயர் அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கப்பல் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம்  2023 அக்டோபரில் முடிவடைந்தது. தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்த கப்பல் மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply