ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு, தற்சார்பு இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு இன்று ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்தியாவில் கடற்படைக்கு புதிய பலத்தையும், தொலைநோக்குப் பார்வையையும் அளித்துள்ளார் என்று கூறினார். சிவாஜி மகராஜின் மண்ணில் 21-ம் நூற்றாண்டில் இந்தியக் கடற்படைக்கு அதிகாரம் அளிக்க அரசு இன்று ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது என்றும் அவர் கூறினார். “பேரழிவைத் தரும் கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை ஒன்றாக முத்தரப்பு பணியில் ஈடுபடுத்துவது இதுவே முதல் முறை” என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மூன்று முன்னணி கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதும் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சாதனைக்காக இந்தியக் கடற்படை, கட்டுமானப் பணியில் தொடர்புடைய அனைவருக்கும், இந்திய மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
“இன்றைய நிகழ்ச்சி நமது புகழ்பெற்ற பாரம்பரியத்தை நமது எதிர்கால விருப்பங்களுடன் இணைக்கிறது” என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். நீண்ட கடல் பயணங்கள், வர்த்தகம், கடற்படை பாதுகாப்பு, கப்பல் தொழில் ஆகியவற்றில் இந்தியா வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதன் மூலம் தற்போதைய இந்திய நாடு உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார். சோழ வம்சத்தின் கடல்சார் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, குஜராத்தின் துறைமுகங்கள் இந்தியாவை மேற்கு ஆசியாவுடன் இணைத்த சகாப்தத்தை நினைவூட்டும் சூரத் போர்க்கப்பல் உள்ளிட்ட புதிய கப்பல்களை தொடங்கி வைத்ததை பிரதமர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி என்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பி75 வகைப்பாட்டில் ஆறாவது வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
“உலகளவில், குறிப்பாக தென்பகுதியில் நம்பகமான மற்றும் பொறுப்பான நட்பு நாடாக இந்தியா தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா விரிவாக்க மனப்பான்மையுடன் அல்லாமல், வளர்ச்சி உணர்வுடன் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். வெளிப்படையான, பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார். கடலோர நாடுகளின் வளர்ச்சி என்று வரும்போது, இந்தியா சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்ற தாரக மந்திரத்தை அறிமுகப்படுத்தி, இந்த தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜி20 தலைமைப் பொறுப்பின் போது இந்தியாவின் தலைமையை எடுத்துரைத்த திரு மோடி, “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற தாரக மந்திரத்தை ஊக்குவித்த திரு மோடி, கோவிட்- 19-க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் போது “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற இந்தியாவின் பார்வையையும் குறிப்பிட்டார். உலகை ஒரே குடும்பமாக நடத்துவதில் இந்தியாவின் நம்பிக்கையையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டையும் சுட்டிக் காட்டினார். ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பை இந்தியா தனது பொறுப்பாக கருதுகிறது என்று அவர் கூறினார்.
உலகளாவிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியலை வடிவமைப்பதில் இந்தியா போன்ற கடல்சார் நாடுகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், பிராந்திய நீர்நிலைகளைப் பாதுகாப்பது, சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வது, பொருளாதார முன்னேற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்காக வர்த்தக விநியோக வழிகள், கடல் பாதைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பயங்கரவாதம், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் இருந்து பிராந்தியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கடல்களை பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும் மாற்றுவதிலும், சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதிலும், கப்பல் தொழிலுக்கு ஆதரவளிப்பதிலும் உலகளாவிய கூட்டாளிகளாக மாறுவதன் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். அரிய தாதுக்கள், மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், அவற்றை நிர்வகிக்கும் திறனை வளர்க்கவும் வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதிய கப்பல் வழித்தடங்கள் மற்றும் கடல்வழித் தகவல் தொடர்புகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திசையில் இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது” என்று கூறினார். சமீபத்திய மாதங்களில், இந்திய கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களையும், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள தேசிய மற்றும் சர்வதேச சரக்குகளையும் பாதுகாத்துள்ளது. இது இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மீதான உலகளாவிய நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆசியான், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற்று வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலை மற்றும் திறன்களே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார். இன்றைய நிகழ்வின் ராணுவம் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் ராணுவ திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துவதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட திரு மோடி, “அது நிலம், நீர், காற்று, ஆழ்கடல் அல்லது எல்லையற்ற விண்வெளியாக இருந்தாலும், இந்தியா தனது நலன்களை எல்லா இடங்களிலும் பாதுகாத்து வருகிறது” என்று எடுத்துரைத்தார். பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியை நியமிப்பது உட்பட தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார் .
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆயுதப் படைகள் தற்சார்பு முறையை ஏற்றுக்கொண்டதை ஒப்புக் கொண்ட பிரதமர், நெருக்கடிகளின் போது மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான சிறந்த முயற்சிகளைப் பாராட்டினார். எதிர்காலத்தில் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படாது என்றும், இறக்குமதி செய்ய வேண்டாம் என்ற பிரிவில் 5,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஆயுதப்படையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி இந்திய வீரர்களின் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தித் தொழிற்சாலை கர்நாடகாவில் அமைக்கப்பட்டிருப்பதையும், ஆயுதப்படைகளுக்கான போக்குவரத்து விமானத் தொழிற்சாலை குறித்தும் திரு மோடி குறிப்பிட்டார். தேஜஸ் போர் விமானத்தின் சாதனைகள் மற்றும் உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடங்களின் மேம்பாடு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். அவை பாதுகாப்பு உற்பத்தியை துரிதப்படுத்துகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை கடற்படை கணிசமாக விரிவுபடுத்தியதற்கு திருப்தி தெரிவித்த பிரதமர், மசாகான் கப்பல் கட்டும் தளத்தின் முக்கிய பங்களிப்பையும் அங்கீகரித்தார். கடந்த பத்தாண்டுகளில் கடற்படையில் 33 கப்பல்களும், 7 நீர்மூழ்கிக் கப்பல்களும் சேர்க்கப்பட்டுள்ளதையும், 40 கடற்படைக் கப்பல்களில் 39 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார். இதில் கம்பீரமான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் போன்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அடங்கும் என்று கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றதற்காக ஆயுதப்படையினரை பிரதமர் பாராட்டினார். இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ. 1.25 லட்சம் கோடியை கடந்துள்ளது என்றும், நாடு 100- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
” இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் முன்முயற்சி இந்தியாவின் ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் திறக்கிறது” என்று திரு மோடி கூறினார். கப்பல் கட்டும் அமைப்பை ஒரு உதாரணமாக மேற்கோள் காட்டிய அவர், கப்பல் கட்டுவதில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொருளாதாரத்தில் சுமார் இரு மடங்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுவதாக குறிப்பிட்டார். தற்போது, நாட்டில் சுமார் ரூ .1.5 லட்சம் கோடி மதிப்புள்ள 60 பெரிய கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த முதலீடு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் என்றும், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஆறு மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான கப்பல் உபகரணங்கள் உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு கப்பலைக் கட்டுவதில் 2,000 தொழிலாளர்கள் ஈடுபட்டால், அது மற்ற தொழில்களில், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் சுமார் 12,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா