மத்தியப் பிரதேசத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் ஆய்வு.

மத்தியப் பிரதேசத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்வதற்காக இன்று புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு  மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை தாங்கினார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலை வகித்தார். மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், வழக்குத் தொடுத்தல் மற்றும் தடயவியல் தொடர்பான பல்வேறு புதிய விதிகளின் அமலாக்கம் மற்றும் தற்போதைய நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய உள்துறை செயலாளர், மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் என்பதே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் சாராம்சம்  என்று திரு அமித் ஷா இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மத்தியப் பிரதேச அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய உள்துறை அமைச்சர், மாநிலத்தில் அவற்றை 100 சதவீதம் விரைவில் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முன்பு, மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த பிரிவுகளைப் பயன்படுத்த இந்த வழக்கு தகுதியானதுதானா என்பதை ஆராய வேண்டும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். இந்த சட்ட விதிகளை தவறாக பயன்படுத்துவது புதிய குற்றவியல் சட்டங்களின் புனிதத்தை களங்கப்படுத்திவிடும் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடய அறிவியல் நடமாடும் வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திரு ஷா வலியுறுத்தினார். காணொலிக் காட்சி மூலம் சாட்சியங்களை பதிவு செய்ய வசதியாக மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளில் போதுமான எண்ணிக்கையில் அறைகள் கட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், நீண்ட காலமாக நாட்டை விட்டு தலைமறைவாக தப்பியோடியவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்தியக் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் விசாரணை செய்வதற்கான வழிவகைகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

பின்தங்கியவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வலுவான சட்ட உதவி முறையின் அவசியத்தை வலியுறுத்திய மத்திய உள்துறை அமைச்சர், இந்த நோக்கத்திற்காக தேவையான பயிற்சிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஏழைகளுக்கு சட்ட உதவிகளை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

Leave a Reply