தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு, பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்புத் துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – 2025 நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024ம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார். மேலும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான கௌரவ விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும் என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டாடப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், 2023ம் ஆண்டு 24 நாடுகள் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024ம் ஆண்டு 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் ஏற்றமிகு வளர்ச்சியினைக் கண்டு வரும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா இந்த ஆண்டு, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்புலக ஆளுமைகள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
கே.பி.சுகுமார்