இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி தமிழரசன் மறைந்து விட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழரசனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளித் தம்பி தமிழரசன் இப்போது தான் பதின்வயதைக் கடந்து வந்திருந்தார். அவரது வாழ்வில் இனி தான் வசந்தங்கள் வீசியிருக்க வேண்டும். அரசியலிலும், சொந்த வாழ்விலும் உயரங்களை நோக்கி இனி தான் அவர் பயணித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு சற்றும் வாய்ப்பளிக்காமல், தமிழரசனை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி, கட்டாயப்படுத்தி தீவைத்து படுகொலை செய்து விட்டனர். நெல்வாய் கிராமத்திற்குள் நுழைந்து கொடியவர்கள் சிலர் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதைத் தவிர வேறு எந்த பாவததையும் தமிழரசன் செய்யவில்லை. கஞ்சா போதையில் நெல்வாய் கிராமத்தில் திருமால்பூரைச் சேர்ந்த பிரேம், மணிகண்டன், வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் இரு சக்கர ஊர்தியில் வந்து அட்டகாசம் செய்ததை தமிழரசன், விஜயகணபதி, சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் தட்டிக் கேட்டனர். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தமிழரசனையும், விஜயகணபதியையும் கொடியவர்கள் கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி படுகொலை செய்ய முயன்றுள்ளது. அந்தக் கொடியத் தாக்குதலில் தமிழரசன் உயிரிழந்து விட்ட நிலையில், இன்னொரு தம்பி விஜயகணபதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். இந்த சதித்திட்டத்திற்கு பெரும் கூட்டம் எல்லா வகையிலும் உதவி செய்துள்ளது.
நெல்வாய் கிராமத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய கும்பலால் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. கஞ்சா வணிகர் செய்வதில் தொடங்கி எதிர்ப்பவர்களைக் கொலை செய்வது வரை எல்லாக் குற்றங்களையும் செய்யும் அந்தக் கும்பலுக்கு அரசும், காவல்துறையும் துணை நிற்பது தான் அவர்களின் துணிச்சலுக்கு காரணமாக உள்ளது. அத்தகைய கும்பல்களின் அட்டகாசத்துக்கு தமிழக அரசும், காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும். தமிழரசன் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழரசனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.
மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் விஜயகணபதிக்கு தரமான மருத்துவர் அளிப்பதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-கே.பி. சுகுமார்.