உலகளாவிய திருக்குறள் மாநாடு தில்லியில் விரைவில் நடத்தப்படும்!- மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்.

உலகளாவிய திருக்குறள் மாநாடு புதுதில்லியில் விரைவில் நடத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற  விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸ்: ஊக்குவிப்பு, தடுப்பு மற்றும் தலையீடு’ (Hypnosis across Lifespan: Promotion, Prevention, and Intervention)  என்ற சர்வதேச மாநாட்டை இன்று (24 ஜனவரி 2025) தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், திருக்குறளின் கருத்துகள் நிலையானது என்றும், இந்த செவ்வியல் நூல் உலகின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது என்றும் கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தெரிவித்த கவலையைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு டாக்டர் எல். முருகன் நன்றி தெரிவித்தார்.

அமைச்சர் தமது தொடக்கவுரையில், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், செயலிழப்பைத் தடுப்பதற்கும், சிக்கலான தருணங்களில் திறம்பட செயலாற்றுவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த, தகவமைப்பு கருவியாக ஹிப்னாஸிஸ் திகழ்வதையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இது போன்ற மாநாடுகள் முக்கியமான உரையாடல்களை வளர்க்கின்றன என்று அவர் கூறினார். மனிதனின் வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸின் பயன்பாட்டை இதுபோன்ற மாநாடுகள் ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறினார்.

ஹிப்னாஸிஸ் துறையில் ஆய்வுக்கான பரந்த வாய்ப்புகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இளம் வல்லுநர்கள் இந்த துறையில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஒரே நாடு, ஒரே சந்தா திட்டம், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள் இந்தியாவின் ஆராய்ச்சி சூழலையும் மேம்பாட்டு சூழல் அமைப்பையும் வலுப்படுத்தும்  என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் யுஜிசி-மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் பஞ்ச ராமலிங்கம் எழுதிய இரண்டு நூல்களை அமைச்சர் வெளியிட்டார். அகாடமி ஆஃப் ஹிப்னாஸிஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், இந்திய உளவியல் பள்ளி சங்க தலைமைத்துவ விருதுகள் – 2024 ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் கே.தரணிக்கரசு இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர்.செல்வம், புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply