புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமாரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் , எமது ஜனநாயகம் உலகின் மிகப் பழமையான ஜனநாயகம் மட்டுமன்றி, உலகின் மிகப் பெரிய, பன்முகத்தன்மை கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உணர்வுபூர்வமான ஜனநாயகம் என்பது நாம் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயமாகும். இந்தியாவின் ஜனநாயகம் நவீன உலகிற்கு ஒரு தனித்துவமான உதாரணம் என்று அவர் கூறினார். நமது தேர்தல் முறை மற்றும் நிர்வாகத்தில் இருந்து உலகின் பல நாடுகள் பாடம் கற்று வருகின்றன என்று கூறினார்.
நம் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் ஈர்க்கக்கூடிய பார்வை தேர்தலில் தெரியும் என்று குடியரசு தலைவர் கூறினார். தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது நமது சமூகம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கிய அறிகுறியாகும். 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் செயல்முறையை எளிதாக்க தேர்தல் ஆணையம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன்மூலம், தேர்தல் ஆணையம் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உணர்திறன் மிக்க தேர்தல் நிர்வாகத்திற்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றார்.
வாக்களிப்புடன் தொடர்புடைய லட்சியங்கள் மற்றும் பொறுப்புகள் எமது ஜனநாயகத்தின் பிரதான பரிமாணங்களாகும் என அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் உறுதிமொழி அனைத்து குடிமக்களுக்கும் வழிகாட்டும். ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கையுடன், அனைத்து வகையான குறுகிய மனப்பான்மை, பாகுபாடு மற்றும் தூண்டுதல்களுக்கு அப்பால் உயர்ந்து வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவோம் என்ற உறுதியையும் வாக்காளர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அறிவொளி பெற்ற வாக்காளர்கள் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
2011 ஆம் ஆண்டு முதல், இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வானது வாக்காளரின் மையத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுவது, குடிமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஜனநாயக செயல்பாட்டில் அவர்களின் தீவிரப் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
திவாஹர்