குடியரசு தினம் – 2025, அணிவகுப்பில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி, அமைச்சகத்தின் திட்டங்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, வாழ்க்கை சுழற்சியின் தொடர்ச்சி ஆகியவற்றை அழகாகச் சித்தரித்தது. காட்சியில் முக்கியமாக ஒரு தாய் தனது பெண் குழந்தையை அன்புடன் தொட்டிலிடுவது இடம்பெற்று இருந்தது. இது ஒரு குழந்தைக்கு தாய் ஆசிரியராக இருப்பதன் பங்கை அடையாளப்படுத்தியது. ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதையும், இந்தியாவின் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஆரோக்கியமான, பிரகாசமான எதிர்காலத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான சாக்ஷம் அங்கன்வாடி, போஷன் அபியான் ஆகியவற்றின் சக்தியைக் குறிக்கும் வகையில் புதிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால் ஆகியவற்றின் துடிப்பான காட்சிகளும் இந்த ஊர்தியில் இடம்பெற்றன.
பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி மகளிருக்கு அதிகாரமளித்தல், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு பெண்களின் பங்கு ஆகியவை தொடர்பான அம்சங்களையும் விளக்கியது. மகளிர் உதவி எண் 181), குழந்தைகள் உதவி எண் (1098) உள்ளிட்ட அமைச்சகத்தின் பல விரிவான திட்டங்களையும் ஊர்தி காட்சிப்படுத்தியது. இந்த முயற்சிகள் பெண்களின் பாதுகாப்பு, அதிகாரமளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, நலன், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10 ஆண்டுகள், அங்கன்வாடி திட்டத்தின் 50 ஆண்டுகள் ஆகிய கொண்டாட்டத்தையும் ஊர்தி அடையாளப்படுத்தியது. நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவில் பெண்கள் தீவிரமாக பங்கேற்பதை துடிப்பான காட்சிகள் எடுத்துக்காட்டின. இது முற்போக்கான இந்தியாவில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டியது.
அரசுத் திட்டங்களின் துடிப்பான சித்தரிப்பு அலங்கார ஊர்தியில் சிறப்பாக அமைந்திருந்தது. அதிகாரமளிக்கப்பட்ட பெண்ணே ஒரு வலுவான தேசத்தின் முதுகெலும்பு என்ற செய்தியை இது வெளிப்படுத்தியது, அதிகாரம் பெற்ற பெண்கள், அதிகாரம் பெற்ற இந்தியா என்ற உணர்வை இந்த வாகனம் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.
எம்.பிரபாகரன்