ஏ.டி.ஜி.பி யின் அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டணை வழங்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல் .

ஜி.கே.வாசன்.

தமிழக காவல்துறையில் உயர்பதவியில் பணியாற்றிய பெண் ஏ.டி.ஜி.பி ஒருவர் காவல்துறையில் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதோடு முறைகேடுகளை அம்பலபடுத்தியதால் அவரது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தன்னை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் காவல்துறையில் உயர்பதிவி வகிக்கும் பெண் ஏ.டி.ஜி.பி அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இதுதான் இன்றைய தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் அவலநிலை. நடுநிலையோடு, நேர்மையாக விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்வு இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இட ஒதுக்கீட்டில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற நியமனத்தில் மீண்டும் குளறுபடிகள் நடைபெற்றது கண்டிபிடிக்கப்பட்டு புதிய பட்டியலை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பையும் தமிழக அரசு நிறைவேற்றாமல் கிணற்றில் போட்ட கல்போன்று கிடப்பில் கிடக்கிறது.

காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகளை சட்டத்தின் முன் முறையாக, நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். ஏடிஜிபியை கொலை செய்ய சதிநடந்தாக கூறப்படுவது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் துரிதமாக செயல்பட்டு குற்றம் இழைத்தவர்களை, காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ததில் தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply