உலகின் 2-வது பெரிய கைபேசி உற்பத்தியாளராக இந்தியா உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ தொலைநோக்குப் பார்வை, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற உதவுகிறது. தொடங்கப்பட்ட ஒரு தசாப்தத்திற்குள் மேக் இன் இந்தியா திட்டம் நமது தற்சார்பை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இது தொடர்பான தரவுகளைப் பகிர்ந்து கொண்ட மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கைபேசி மற்றும் மின்னணு உற்பத்தித் துறையின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துரைத்தார்.

இந்தியா கைபேசி மற்றும் மின்னணு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகின் 2வது பெரிய கைபேசி உற்பத்தி நாடாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 2 கைபேசி உற்பத்தி அலகுகள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று வரை வேகமாக முன்னேறி, நாட்டில் 300-க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகள் உள்ளன. இது இந்த முக்கிய துறையில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2014 -15-ம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட கைபேசிகளில் 26% மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்பட்டன. இன்று, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைபேசிகளிலும் 99.2% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கைபேசிகளின் உற்பத்தி மதிப்பு 2014 நிதியாண்டில் ரூ.18,900 கோடியிலிருந்து 2024 நிதியாண்டில் ரூ.4,22,000 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு 325 முதல் 330 மில்லியனுக்கும் அதிகமான கைபேசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் சராசரியாக சுமார் ஒரு பில்லியன் கைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்திய கைபேசிகள் உள்நாட்டு சந்தையை கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ளன. அதாவது கைபேசிகளின் ஏற்றுமதியில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் கிட்டத்தட்ட இல்லாமல் இருந்த ஏற்றுமதி, இப்போது ரூ.1,29,000 கோடியைத் தாண்டிவிட்டது.

இந்தத் துறையின் விரிவாக்கம் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு உந்துதலாகவும் இருந்து வருகிறது, இது தசாப்தத்தில் சுமார் 12 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளது. இந்த வேலைவாய்ப்புகள் ஏராளமான குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்தியது மட்டுமல்லாமல், நாட்டின் சமூக-பொருளாதார கட்டமைப்பிற்கும் பங்களித்துள்ளன.

இந்தியாவில் தயாரிப்போம்’ முயற்சி இந்த மைல்கற்களை அடைவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

எதிர்காலத்தில், மதிப்புச் சங்கிலியில் ஆழமாக முன்னேறுவதில், குறிப்பாக கூறுகள் மற்றும் குறைக்கடத்திகள் உற்பத்தியில் கவனம் தீவிரமடையும். இந்த மாற்றம் சுயசார்பை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய மின்னணு சந்தையில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதற்கும் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.

மதிப்புச் சங்கிலியில் ஆழமாக முன்னேறுவதில் இப்போது கவனம் செலுத்தப்படுவதாகவும், நுண்ணிய கூறுகள் மற்றும் குறைக்கடத்தி உற்பத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இதன் மூலம் மின்னணு கூறு சூழல் அமைப்பின் உள்நாட்டு வளர்ச்சியை உறுதி செய்வதாகவும் திரு அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். இது உலகளவில் முன்னணி மின்னணு சந்தையாக இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும்.

நாட்டில் ஒரு குறைக்கடத்தி உற்பத்தித் தளத்தை அமைப்பது மேக் இன் இந்தியாவின் ஒரு முக்கிய பகுதியாகும். இதை இந்தியா ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அடைய முயற்சித்து வருகிறது. இந்தியா செமிகண்டக்டர் மிஷன் தொடங்கப்பட்டது முதல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஐந்து முக்கிய திட்டங்களுக்கும், இந்த நாட்டில் உண்மையான உற்பத்தித் தளம் இந்தியாவில் நிறுவப்படுகிறது.

பொம்மைகள் முதல் கைபேசிகள், பாதுகாப்பு உபகரணங்கள்,  மின்சார வாகன மோட்டார்கள் வரை, உற்பத்தி மீண்டும் இந்தியாவுக்கு நகர்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ தொலைநோக்குப் பார்வை, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதாகும். மேக் இன் இந்தியா திட்டம், தற்சார்பை ஊக்குவித்தல், உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இதன் மூலம் நாட்டின் பொருளாதார வலிமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

Leave a Reply