விவசாயிகள் உணவு உற்பத்தி செய்து வழங்குபவர்கள் என்றும், அவர்கள் யாருடைய உதவியையும் நம்பியிருக்கக்கூடாது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று கூறியுள்ளார். ராஜஸ்தானின் சித்தோர்கரில் அகில மேவார் பிராந்திய ஜாட் மகாசபா நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும்போது, நாட்டின் நிலைமை மேம்படும் என்றார். விவசாயிகள், தங்கள் வலுவான செயல்பாடுகளால், அரசியல் வலிமையையும் பொருளாதார திறனையும் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் விவசாயிகளின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அது அளப்பரியது என்றும் அவர் கூறினார். நாட்டில் தற்போதைய ஆட்சி நிர்வாகம், விவசாயிகளுக்கு மரியாதை அளித்து அவர்களுக்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜாட் இடஒதுக்கீடு இயக்கத்தை நினைவு கூர்ந்த அவர், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஜாட்டுகளும் வேறு சில சாதியினரும் இடஒதுக்கீடு பெற்றனர் என்றார். அந்த முயற்சியின் பலன்களை இப்போது நாட்டிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் நிர்வாக சேவைகளிலும் காண முடிகிறது என அவர் கூறினார். சமூக நீதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பயனடைந்தவர்கள் இப்போது அரசின் முக்கிய பதவிகளில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார். அதை அவர்கள் ஒருபோதும் மறக்க கூடாது எனவும் அவர் கூறினார்.
வேளாண் அறிவியல் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளை ஊக்குவித்த அவர், விவசாயிகளுக்கு உதவ 730 வேளாண் அறிவியல் மையங்கள் உள்ளன என்றார். அவற்றின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள், அரசின் கொள்கைகள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டுறவுச் சங்கங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் விவசாயிகள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இளைஞர்கள் வேளாண் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், வேளாண் உற்பத்தி என்பது உலகின் மிகப்பெரிய, மிகவும் மதிப்புமிக்க வர்த்தகமாகும் என்றார்.
எஸ்.சதிஸ் சர்மா