தடுப்பூசி, சந்திரயான் போன்ற உலகளாவிய வெற்றிகளால் இந்தியாவின் உயரமும் திறனும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில். விக்யான் பாரதி-யின் புதிய வளாகத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், இந்த வளாகம் கருத்துப் பரிமாற்றத்திற்கான மையமாகவும், கற்றல் மையமாகவும் செயல்படும் என்று கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு வேகமான வளர்ச்சியைக் காண்கிறது என்று அவர் கூறினார். அறிவியலுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வலுவான ஆதரவை பிரதமர் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். குணப்படுத்தும் சுகாதார சேவையிலும் தடுப்பு மருந்து சுகாதார சேவையிலும் உலகளாவிய முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கொவிட் தொற்று பாதிப்பின் போது உருவாக்கப்பட்ட முதல் டிஎன்ஏ தடுப்பூசி உள்ளிட்ட இந்தியாவின் சாதனைகளையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
அறிவியலில் மேலும் முன்னேற்றத்தை அடைய ஒருங்கிணைப்பு தேவை என்று வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், பரந்த அறிவியல் ஒருங்கிணைப்புக்கான முக்கிய மையமாக விக்யான் பாரதி திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இத்தகைய முயற்சிகள் மூலம் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகளாவிய பெரிய சக்தியாக இந்தியா தொடர்ந்து உயரும் என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
திவாஹர்