மகா கும்பமேளாவில் அதிக கூட்டம் இருந்தபோதிலும் யாத்ரீகர்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்வதற்கு இந்திய ரயில்வே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வெளியான தவறான ஊடகச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள எட்டு வெவ்வேறு ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 330 ரயில்கள் மூலம் 12 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளை அவர்களுடைய சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பியதாகத் தெரிவித்தார். கூட்ட நெரிசல் குறையவில்லை என்றாலும், இந்த நிலையங்களில் இருந்து தலா ஒரு ரயிலை 4 நிமிடங்களுக்குள் இயக்குவதன் மூலம் யாத்ரீகர்கள் புனித நீராடிய பிறகு காத்திருக்க வேண்டியதில்லை என்பதை இந்திய ரயில்வே உறுதி செய்வதாக அவர் கூறியுள்ளார்.
மாகி பூர்ணிமாவின் அடுத்த புனிதமான அமிர்த நீராடலுக்கு முன்னதாக, ஒரு ரயிலில் சராசரியாக 3780 பயணிகளுக்ககு ஒரே பயணத்தில் சேவை செய்து வருவது, கூட்ட நெரிசல் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. மண்டல மற்றும் கோட்ட ரயில்வே அதிகாரிகளுடனான கூட்டத்தில் நிலைமையை மதிப்பாய்வு செய்த ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சதீஷ் குமார், மக்களுக்கு திறமையாகவும் முழு திறனுடனும் சேவை செய்வதில் அதன் அனைத்து முயற்சிகளையும் ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். பிரயாக்ராஜ் சந்திப்பு மற்றும் பிரயாக்ராஜ் சியோகி, நைனி, சுபேதர்கஞ்ச், பிரயாக், பாபமாவ், பிரயாக்ராஜ் ராம்பாக் மற்றும் ஜூசி ஆகிய 7 நிலையங்களுடன் முழுமையாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து நெரிசல் இருந்தபோதிலும், பிரயாக்ராஜ் பகுதியிலிருந்து இந்த 8 ரெயில் நிலையங்களிலிருந்து சிறப்பு மற்றும் வழக்கமான ரயில்கள் முழு திறனுடன் இயக்கப்படுகின்றன. எந்தவொரு அமிர்த நீராடலுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பும் இரண்டு நாட்களுக்குப் பிறகும் பிரயாக்ராஜ் சங்கம் என்ற ஒரே ஒரு நிலையம் மூடப்படுவது ஒரு வழக்கமான நடைமுறை என்று திரு சதீஷ் குமார் கூறினார்.
எம். பிரபாகரன்