சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஹிதாயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி ராமசுப்பிரமணியன் 2025 பிப்ரவரி 7 அன்று, டிஜிட்டல் சூழலில் ஆள்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை குறித்த ஒரு நாள் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஆள்கடத்தலுக்கு மின்னணு தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடத்தல் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் இணையம், சமூக ஊடகங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் பல்வேறு ஆன்லைன் உபகரணங்களின் பங்கையும், அவற்றைத் தடுப்பதில் தொழில்நுட்பம், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சமூகத்தின் பங்கையும் இந்த மாநாடு ஆய்வு செய்தது.
இம்மாநாட்டில் மெய்நிகர் முறையில் உரையாற்றிய நீதிபதி ராமசுப்பிரமணியன், இணையதளம் மூலம் நடைபெறும் கடத்தல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து நிபுணர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இடையே உரையாற்றினார். பாலியல் வன்கொடுமை, தொழிலாளர் சுரண்டல், மனித உறுப்பு கடத்தல், கட்டாய திருமணம் போன்ற பல்வேறு வகையான மின்னணு முறையிலான கடத்தல்களை விரிவாக எடுத்துரைத்தார்.
டிஜிட்டல் தளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் திறம்பட சரிபார்க்க ஒழுங்குமுறை மற்றும் நிறுவன கட்டமைப்புகள், தொழில்நுட்ப தீர்வுகளை வலுப்படுத்துவதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் தளங்களில் ஈடுபடும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா