கிரிக்கெட், கோ-கோ போட்டியில் சாதனை படைத்த கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ.25லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோரிடம் வழங்கினார்.
மேலும், புதுடெல்லியி்ல் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் வி. சுப்ரமணிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
எஸ். திவ்யா