மகா கும்பமேளாவில் இதுவரை 45 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாட்கள் மீதமுள்ள நிலையிலேயே, இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 9-ம் தேதி வரை பிரயாக்ராஜ் நகருக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 330 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கும்பமேளா நடைபெறும் பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகா கும்பமேளாவில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். திரையுலகினர் மற்றும் விளையாட்டுத் துறையினரும் இதில் கலந்துகொண்டனர்.
திவாஹர்