தமிழக அரசு, மாநிலத்தில் மக்களின் நியாயமான தேவையான குடியிருப்பு, விவசாய நிலம் உள்ளிட்ட வருவாய்த்துறையின் பணிகளை முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக சிட்டா அடங்கல், பட்டா, பட்டா மாறுதல், கூட்டு பட்டா, பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் போன்றவற்றிற்காக கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும்.
அப்படி சென்றால் அங்கு தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களோ, அதிகாரிகளோ இல்லை என்ற குறை உள்ளது. இந்நிலையில் மக்களின் வீடு, இடம், நிலம் சம்பந்தமான மனுவை விசாரித்து, அதற்கான தீர்வு ஏற்பட பெற வேண்டுமென்றால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையே தமிழகத்தில் நிலவுகிறது.
இப்படி வருவாய்த்துறையினரின் காலதாமதமான பணியால் வசதி படைத்தவர்களால் பொருமை காக்க முடியும். ஆனால் ஏழை, எளிய மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழக அரசு வருவாய்த்துறைக்கு உதாரணத்திற்கு பட்டா சம்பந்தமாக 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் வருடக்கணக்கில் பட்டா சம்பந்தமாக வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு சென்று வந்த, மனதளவில், பொருளாதார அளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது. பட்டா கேட்டு மனு கொடுத்து தீர்வு கிடைக்காமல் காலமானவர்களும் உண்டு. அவர்களின் வாரிசுகளும் பட்டா கேட்டு அலைந்து கொண்டு இருப்பதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் வருவாய்த்துறையை முறைப்படி, சரியாக இயக்காத தமிழக அரசு தான்.
இந்நிலையில் வருவாய்த்துறையினர் விதிப்படி வேலை என்ற போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதாவது வருவாய்த்துறை அலுவலகங்களில் உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை பணிபுரியும் 14 ஆயிரம் பணியாளர்கள் அலுவலக நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், விடுமுறை நாட்களிலும் பணியாற்ற போவதில்லை எனத்தெரிவித்துள்ளனர்.
இதனால் வருவாய்த்துறையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே தமிழக அரசு, வருவாய்த்துறையில் பணியும் பணியாளர்கள் விடுத்துள்ள பணி அழுத்தம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழக அரசு, வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அளிக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கும், மனுக்களுக்கும் காலத்தே விசாரணை நடைபெறவும், காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வு ஏற்படவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா