பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டத்தில் குடியரசு தலைவர் பங்கேற்பு.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 15, 2025) ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் நடைபெற்ற பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

இதில் உரையாற்றிய  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நமது காலம் தொழில்நுட்ப யுகம் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றங்கள் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளன. நேற்று வரை நினைத்துப் பார்க்க முடியாதது இன்று நிஜமாகிவிட்டது. வரும் ஆண்டுகள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலில் எதிர்பார்க்கப்படும் தொலைநோக்கு முன்னேற்றங்களுடன் இன்னும் வியத்தகு முறையில் இருக்கும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு,  பொருளாதாரங்களை விரைவாக மாற்றுவதால், வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய அரசு விரைவாக தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.  உயர்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவை  ஒருங்கிணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் சமூகங்களில் பெரும் இடையூறுகளை உருவாக்குவதால், விளிம்புநிலைக் குழுக்களில் அதன் தாக்கம் குறித்து நாம் தொடர்ந்து கவலைப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தினார். உருவாக்கப்படும் மகத்தான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; கொண்டு வரப்படும் மகத்தான மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலும், நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு பெரிய தொழில்நுட்ப தலையீடு தேவையில்லை என்று குடியரசு தலைவர் கூறினார். சிறிய அளவிலான, பாரம்பரிய தீர்வுகளின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். புதுமைப்பித்தன்கள் மற்றும் தொழில்முனைவோர் பாரம்பரிய சமூகங்களின் அறிவுத் தளத்தை புறக்கணிக்கக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு பிட் மெஸ்ராவின் பங்களிப்புகளைக் கொண்டாடவும் கௌரவிக்கவும் இந்த விழா ஒரு பொருத்தமான சந்தர்ப்பம் என்று குடியரசு தலைவர் கூறினார். இந்த நிறுவனம் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருவதைக் குறிப்பிட்டதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். நாட்டில் முதல் விண்வெளி பொறியியல் மற்றும் ராக்கெட்ரி துறை 1964-ல் இங்கு நிறுவப்பட்டது. பொறியியல் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்காக்களில்  ஒன்று 1975 இல் இங்கு அமைக்கப்பட்டது. இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சிக்கு பிட் மெஸ்ரா தொடர்ந்து வளமான பங்களிப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply