இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார். 2025 பிப்ரவரி 24 அன்று, திரு உபேந்திர திவிவேதி, பிரான்சின் மூத்த ராணுவத் தளபதியுடன் பாரிஸில் உள்ள லெஸ் இன்வாலிடெஸில் பேச்சு நடத்துவார். அதைத் தொடர்ந்து பிரான்ஸின் ராணுவ தளபதி ஜெனரல் பியர் ஷில்லுடன் அவர் பேச்சு நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ராணுவ உறவுகளை வளர்ப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். பாரிஸில் உள்ள மதிப்புமிக்க ராணுவப் பள்ளி நிறுவன வளாகமான இகோல் மிலிட்டரி பள்ளிக்கு அவர் பயணம் மேற்கொள்வார். அங்கு அந்நாட்டு பிரதிநிதிகளுடன் எதிர்கால போர் உத்திகள் குறித்து அவர் விவாதிப்பார். ஜெனரல் திவேதிக்கு பிரெஞ்சு ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு குறித்து விளக்கமளிக்கப்படும். அத்துடன் வெர்சாய்ஸில் உள்ள பேட்டில் லேப் டெர்ரேவை அவர் பார்வையிடுவார்.
2025 பிப்ரவரி 25 அன்று, ஜெனரல் திவேதி மார்சேய்க்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பிரெஞ்சு ராணுவத்தின் 3 வது பிரிவைப் பார்வையிடுவார். மேலும் 3 வது பிரிவின் பணி, இருதரப்பு பயிற்சியான சக்தி போன்றவை குறித்து அவர் ஆலோசனை நடத்துவார். அடுத்த நாள், ஜெனரல் திவேதி கார்பியாக்னேவுக்குச் சென்று ஸ்கார்பியன் டிவிஷனின் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பார்வையிடுவார்.
2025 பிப்ரவரி 27 அன்று, ராணுவ தலைமைத் தளபதி நியூவ் சேப்பல் இந்திய போர் நினைவிடத்திற்குச் சென்று முதலாம் உலகப் போரில் பங்கேற்று இறந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் . அன்று பிரெஞ்சு கூட்டுப் பணியாளர் கல்லூரியான எகோல் டி குவேரில் அவர் உரையை நிகழ்த்துவார்.
ஜெனரல் திவிவேதியின் பயணம் இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்தல், இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையில் புத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திவாஹர்