பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.

இப்போதெல்லாம் மதத்தை கேலி செய்து, மக்களைப் பிரிக்கும் அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சில நேரங்களில், தேசத்தையும் மதத்தையும் பலவீனப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் அத்தகைய நபர்களுக்கு ஆதரவு கிடைக்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்து மதத்தை வெறுக்கும் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் இருந்து வருகின்றனர் என்று அவர் கூறினார். நமது நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த அம்சங்கள் நமது கலாச்சாரம், கொள்கைகள் மீதான தாக்குதல்கள் என்று குறிப்பிட்டார். இத்தகைய நபர்கள் நமது பண்டிகைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகளை குறிவைக்கிறார்கள் எனவும், நமது மதம், கலாச்சாரத்தின் உள்ளார்ந்த முற்போக்கான தன்மையை இழிவுபடுத்தவும் துணிகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நமது சமூகத்தைப் பிளவுபடுத்தி அதன் ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்ற அவர்களின் செயல் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், நீண்ட காலமாக நாட்டில் ஒற்றுமை என்ற மந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திரு தீரேந்திர சாஸ்திரியின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். புற்றுநோய் நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் சமூகம், மனிதகுலத்தின் நலனுக்காக திரு தீரேந்திர சாஸ்திரி மற்றொரு உறுதிமொழியை எடுத்துள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார். இதன் விளைவாக, பாகேஷ்வர் தாமில் பக்தி, ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிய இரண்டும் ஆசீர்வாதங்களுடன் இப்போது கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

“நமது கோயில்கள், மடாலயங்கள், புனிதத் தலங்கள் வழிபாட்டு மையங்களாகவும், அறிவியல், சமூக சிந்தனைக்கான மையங்களாகவும் இரட்டை பங்களிப்பைக் கொண்டுள்ளன” என்று கூறிய பிரதமர், நமது ஞானிகள் நமக்கு ஆயுர்வேதம், யோகா அறிவியலை வழங்கியுள்ளதாகவும், அவை இப்போது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். பிறருக்குச் சேவை செய்வதும், அவர்களின் துயர் துடைப்பதுமே உண்மையான மதம் என்று அவர் தெரிவித்தார். “நாராயணனில் நரன்”, “எல்லா உயிர்களிலும் சிவன்” என்ற உணர்வுகளுடன் அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்யும் நமது பாரம்பரியத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று, புனித நீராடி, துறவிகளின் ஆசீர்வாதங்களைப் பெறும் மகா கும்பமேளா குறித்த பரவலான விவாதங்கள் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதை “ஒற்றுமைக்கான மகா கும்பமேளா” என்று பாராட்டியதுடன், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவுக்கு மத்தியில், ‘நேத்ர மகா கும்பமேளா’ நடத்தப்பட்டாலும், அது அதிக கவனத்தை ஈர்க்கவில்லை என்றும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு இலவச மருந்துகளும் கண்ணாடிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 16,000 நோயாளிகள் கண்புரை, பிற அறுவை சிகிச்சைகளுக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மகா கும்பமேளாவில், நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், தன்னார்வலர்கள் தன்னலமின்றி பங்கேற்று வழங்கி வரும் எண்ணற்ற சுகாதார சேவை தொடர்பான முன்முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் இந்த முயற்சிகளை பாராட்டியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் பெரிய மருத்துவமனைகளை நடத்துவதில் மத நிறுவனங்களின் பங்கை பிரதமர் சுட்டிக் காட்டினார். பல சுகாதார, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மத அறக்கட்டளைகளால் நிர்வகிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு சிகிச்சையையும் சேவையையும் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கடவுள் ராமருடன் தொடர்புடைய பண்டேல்கண்டில் உள்ள புனித யாத்திரை தலமான சித்ரகூட், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு சேவை செய்வதற்கான முக்கிய மையமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியத்தின் ஆசீர்வாதங்களை வழங்குவதன் மூலம் இந்த புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு பாகேஷ்வர் தாம் புதிய அத்தியாயத்தை சேர்ப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மகாசிவராத்திரி அன்று, 251 மகள்களுக்கு வெகுஜன திருமண விழா நடைபெறும் என்று அவர் அறிவித்தார். இந்த உன்னதமான முன்முயற்சிக்காக பாகேஷ்வர் தாம் அமைப்பைப் பாராட்டிய பிரதமர், எதிர்காலத்தில் அழகான வாழ்க்கை வாழ புதுமணத் தம்பதிகள், மகள்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் ஆசிகளையும் தெரிவித்தார்.

மகிழ்ச்சி, வெற்றியை அடைவதற்கு நமது உடலும் ஆரோக்கியமும் முதன்மையான வழிகள் என்று பிரதமர் வலியுறுத்தினார். சேவை செய்வதற்கான வாய்ப்பை நாடு தமக்கு வழங்கியபோது, “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்தை அரசின் தீர்மானமாக தாம் ஆக்கிக் கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதன் முக்கிய அடித்தளம் அனைவருக்கும் சுகாதாரம் என்றும் பொருள்படும் என அவர் தெரிவித்தார். பல்வேறு நிலைகளில் நோய்களை தடுப்பதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்பட்டதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, கழிப்பறைகள் கட்டப்படுவதால் சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் நோய்கள் குறைந்துள்ளன என்றார். கழிப்பறை வசதி உள்ள வீடுகள் மருத்துவச் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றைக் குறிப்பிட்டு அவர் மேற்கோள் காட்டினார்.

Leave a Reply