பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து அங்கீகரிக்கிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவிலேயே முதன்முறையாக அடிமட்ட கண்டுபிடிப்பாளர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஊக்குவித்து அங்கீகரிக்கிறது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்தியாவின் பிரத்யேக பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் உறுதிப்பாட்டை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் கிராமப்புற கண்டுபிடிப்புகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்த அமைச்சர், தொலைதூர கிராமங்களில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் சம வாய்ப்புகள், வளங்களை உறுதி செய்தல் அரசின் முக்கியப் பணியாக உள்ளது என்றார்.

கடந்த வாரம் மனதின் குரல் நிகழ்ச்சியில், தேசிய அறிவியல் தினத்தை பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அறைகூவலை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். அறிவியல், தொழில்நுட்பத்திற்கு இத்தகைய ஆதரவை ஒரு பிரதமர் அளிப்பது முன்னெப்போதும் இல்லாதது என்று அவர் தெரிவித்தார்.

புதுமைகளை ஊக்குவித்த பத்ம விருது பெற்றவர்களிடையே பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 1990-களிலேயே தங்கள் பணியைத் தொடங்கிய இவர்களது பணியை அங்கீகரிப்பதில் நீண்ட தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார். பத்ம விருதுகளை உண்மையான அர்த்தத்தில் ‘மக்களின் பத்ம விருதாக மாற்றியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தனியார் பங்களிப்புக்காக விண்வெளித் துறையை இந்தியா திறந்துள்ளது என்று  அமைச்சர் கூறினார். சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் முறையாக அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு அனைத்து கண்டுபிடிப்பாளர்களும் பங்களிக்க வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவியல், தொழில்நுட்பம் செழித்து வளர்ந்து வருவதால், இந்தியாவில் கண்டுபிடிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் இது உண்மையில் சிறந்த நேரம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

Leave a Reply